சொத்து தகராறில் விவசாயி துப்பாக்கியால் சுட்டு கொலை-சகோதரர் கைது


சொத்து தகராறில் விவசாயி துப்பாக்கியால் சுட்டு கொலை-சகோதரர் கைது
x

கொப்பல் அருகே, நிலத்தகராறில் துப்பாக்கியால் சுட்டு விவசாயியை கொன்ற சகோதரரை போலீசார் கைது செய்தனர்.

கொப்பல்:

நிலத்தகராறு

கொப்பல் தாலுகா அலவந்தி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கவலூரு கிராமத்தை சேர்ந்தவர் ராகவேந்திரா. இவரது சகோதரர் விநாயக் (வயது 32). இவர்கள் 2 பேரும் விவசாயிகள் ஆவார்கள். இந்த நிலையில் ராகவேந்திராவுக்கும், விநாயக்கிற்கும் இடையே சொத்தை பிரிப்பது தொடர்பாக சில ஆண்டுகளாக தகராறு இருந்து வந்தது. இதுதொடர்பாக அவர்கள் அடிக்கடி மோதியும் கொண்டனர்.

இந்த நிலையில் நேற்று சொத்தை பிரிப்பது தொடர்பாக சகோதரர்கள் இடையே பிரச்சினை உண்டானது. அப்போது ஆத்திரம் அடைந்த ராகவேந்திரா வீட்டிற்கு சென்று நாட்டு துப்பாக்கியை எடுத்து வந்து விநாயக்கை நோக்கி சுட்டார். இதில் ரத்தவெள்ளத்தில் விநாயக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சுட்டுக்கொலை

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராகவேந்திரா தப்பி ஓடிவிட்டார். சம்பவம் பற்றி அறிந்ததும் கொப்பல் போலீஸ் சூப்பிரண்டு அருணான்சு கிரி, அலவந்தி போலீசார் விரைந்து சென்று விநாயக்கின் உடலை பார்வையிட்டனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் சொத்து தகராறில் விநாயக்கை, ராகவேந்திரா சுட்டு கொன்றது தெரியவந்தது.

மேலும் அவர் உரிமம் பெற்று துப்பாக்கி பயன்படுத்தியதும் தெரியவந்து உள்ளது. இந்த கொலை சம்பவம் குறித்து அலவந்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் தலைமறைவாகிவிட்ட ராகவேந்திராவை வலைவீசி தேடிவருகின்றனர். சொத்து தகராறில் விவசாயி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் கொப்பலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story