தர்மஸ்தலா கோவிலுக்கு தரிசனத்திற்கு சென்றுவந்த காதல் ஜோடியை தடுத்து நிறுத்திய இந்து அமைப்பினர்

தர்மஸ்தலா கோவிலுக்கு தரிசனத்திற்கு சென்றுவந்த காதல் ஜோடியை தடுத்து நிறுத்திய இந்து அமைப்பினர், அவர்களை போலீசில் ஒப்படைத்தனர்.
மங்களூரு:
கதக்கை சேர்ந்தவர்கள்
தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா தர்மஸ்தலாவில் மஞ்சுநாதேஸ்வர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் 100-க்கும் மேற்பட்டவர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் மஞ்சுநாதேஷ்வர் கோவிலுக்கு கதக் மாவட்டத்தை சேர்ந்த ரபீக் (வயது 26) என்பவர் வந்தார். அவர் தன்னுடன் 28 வயது பெண் ஒருவரை அழைத்து வந்தார்.
அவர்கள் காதல் ஜோடி என கூறப்படுகிறது. அவர்கள் கோவிலில் இருந்து புறப்பட்டனர். பின்னர், அவர்கள் அந்த பகுதியில் தங்குவதற்காக அருகில் இருந்த விடுதிக்கு சென்றனர். அப்போது விடுதி ஊழியர்கள் அவர்களிடம் அடையாள அட்டையை காட்டுமாறு கூறினர். அவர்கள் தங்களுடைய அடையாள அட்டைகளை காண்பித்தனர்.
விடுதியில் தங்க அனுமதி
அப்போது இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் விடுதியில் தங்க அனுமதி கிடையாது என விடுதி மேலாளர் கூறினார். இதனால் இருதரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில் இதுகுறித்து அறிந்த இந்து அமைப்பினர் சிலர் விடுதிக்கு வந்தனர். அவர்களும் காதல் ஜோடிகளை விடுதியில் தங்க அனுமதிக்க கூடாது என கூறினர்.
இதையடுத்து காதல் ஜோடி சுப்ரமணியாவுக்கு செல்ல முயன்றனர். அவர்களை இந்து அமைப்பினர் தடுத்து நிறுத்தினர். மேலும், அவர்களை போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார், பெண்ணின் பெற்றோரை தொடர்பு கொண்டு பெண்ணுக்கு அறிவுரைகள் கூறி அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். அந்த வாலிபரையும்
எச்சரித்து அனுப்பினர்.






