பெங்களூருவில், 3 ஆயிரம் சாலை பள்ளங்கள் மூடப்பட்டு உள்ளது: மாநகராட்சி தலைமை கமிஷனர் தகவல்


பெங்களூருவில், 3 ஆயிரம் சாலை பள்ளங்கள் மூடப்பட்டு உள்ளது:  மாநகராட்சி தலைமை கமிஷனர் தகவல்
x

பெங்களூருவில் 3 ஆயிரம் சாலை பள்ளங்கள் மூடப்பட்டு உள்ளதாக மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் கூறியுள்ளார்.

பெங்களூரு:

ஆலோசனை

பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது தொடர்பாக மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் கர்நாடக கூடுதல் தலைமை செயலாளர் ரஜனீஷ் கோயல், மாநகராட்சி நிர்வாக அதிகாரி ராகேஷ் சிங், பெங்களுரு நகர போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி, போக்குவரத்து இணை போலீஸ் கமிஷனர் ரவிகாந்தேகவுடா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது, சாலை பள்ளங்களை மூடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டம் முடிந்ததும் மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது. இதனால் போக்கு

வரத்து பிரச்சினை படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. பெங்களூருவில் பல்வேறு சந்திப்புகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது. தற்போது போக்குவரத்து நெரிசல் 40 சதவீதமாக குறைந்து உள்ளது. ஹெப்பால், கே.ஆர்.புரா, கோரகுண்டேபாளையா, சாரக்கி, சில்க் போர்டு ஆகிய சந்திப்புகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பணி 50 சதவீதம் முடிந்து உள்ளது.

3 ஆயிரம் பள்ளங்கள் மூடல்

பெங்களூரு நகரில் போலீஸ் துறையால் அடையாளம் காணப்பட்ட 3,750 சாலை பள்ளங்களில் 3 ஆயிரம் சாலை பள்ளங்கள் மூடப்பட்டு விட்டன. இன்னும் 750 பள்ளங்களை மூட வேண்டி உள்ளது. அந்த பள்ளங்களை ஒரு வாரத்திற்குள் மூடும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. நகரில் 50 இடங்கள் தண்ணீர் தேங்கும் பகுதிகளில் என்று கண்டறியப்பட்டு உள்ளது. தண்ணீர் தேங்கும் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும். 54 சாலைகளில் மேற்பரப்பு சேதம் அடைந்து உள்ளது. அதை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பணிகள் நடக்கும் இடங்களில் தண்ணீர் தேங்காமல் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். அந்த பகுதிகளில் பள்ளங்கள் இருந்தால் அதை உடனடியாக மூட வேண்டும். நடைபாதையை முறையாக பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடைபாதையில் குப்பைகள் இருந்தால் அதை உடனடியாக அகற்றவும் அதிகாரிகள் முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story