கோலார் தங்கவயலில் ஏரி, தோட்டங்களில் பூக்கும் மஞ்சள் அல்லி பூக்கள்


கோலார் தங்கவயலில்  ஏரி, தோட்டங்களில் பூக்கும் மஞ்சள் அல்லி பூக்கள்
x
தினத்தந்தி 15 Oct 2023 6:45 PM GMT (Updated: 15 Oct 2023 6:45 PM GMT)

கோலார் தங்கவயலில் ஏரி, தோட்டங்களில் பூத்து கிடக்கும் மஞ்சள் அல்லி பூக்களை தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் பராமரிக்க வேண்டி பொதுமக்கள், வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கோலார் தங்கவயல்

அல்லி பூக்கள்

கோலார் தங்கவயல் தாலுகாவில் தற்போது அல்லி பூக்களுக்கு வரவேற்பு அதிகரித்து காணப்படுவதாக கூறப்படுகிறது. இந்த பூக்கள் பெரும்பாலும் மாலைகள் தொடுப்பதற்கு பயன்படுத்தப்படும். இது இயற்கையான பூ என்று கூறப்படுகிறது.'

தாவரவியல் பூங்காக்களில்தான் இந்த பூக்களை நாம் காண முடியும். ஆனால் கோலார் தங்கவயலில் விவசாய நிலம் மற்றும் காலி இடங்களில் இந்த பூக்கள் வளர்ந்து வருவது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. குறிப்பாக இந்த அல்லி பூ மழை காலங்களில்தான் அதிகளவு பூக்கும்.

அதாவது செப்டம்பர், அக்டோபர், நம்பர் மாதங்களில்தான் இந்த பூக்கள் பூக்கும். வறட்சிக் காலங்களில் இந்த பூக்கள் காணப்படுவது இல்லை. இந்த பூக்கள் வெள்ளை, சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் காணப்படும். ஆனால் இதில் அதிகப்படியாக மஞ்சள் நிறத்தைதான் காண முடியும்.

வெள்ளை, சிவப்பு நிற பூக்களை நாம் காண்பது அறிது. இந்த அல்லி பூக்களுக்கு வாசனை மிகவும் குறைவு என்று கூறப்படுகிறது.

ஏரிகள், தோட்டங்களில் பூக்கும்

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக கோலார் தங்கவயலை அடுத்த பேத்தமங்களா, கம்மசந்திரா பகுதிகளில் உள்ள ஏரிகள், தோட்டங்கள், ஓடைகள், தைலத்தோப்புகளில் இந்த பூக்கள் அதிகளவு பூக்க தொடங்கியுள்ளது. மேலும் கோலார் தங்கவயல் பகுதியில் உள்ள பண்ணை வீடுகளிலும் இந்த அல்லி பூக்களை அதிகளவு காண முடியும்.

மாலைகள் கட்டுவதற்கு பயன்படுத்தப்படுவதால், பூ வியாபாரிகள் இந்த அல்லி பூக்களை தேடி கண்டுபிடித்து பறித்து செல்வதாக கூறப்படுகிறது.

சிலர் இந்த அல்லி பூக்களை பறித்து, வியாபாரிகளிடம் விற்பனை செய்து பணம் சம்பாதித்து வருவதாகவும் கூறப்படுகிறது. தற்போது மார்க்கெட்டில் அதிகளவு வரவேற்பு இருப்பதால் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் அந்த அல்லி பூக்களை பராமரிப்பதில் அதிகளவு ஆர்வம் காட்டவேண்டும்.

மேலும் விவசாயிகள் சாகுபடி செய்ய வழிவகை செய்யவேண்டும் என்று பொதுமக்கள், பூ வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story