காங்கிரஸ் பிரமுகர் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது


காங்கிரஸ் பிரமுகர் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது
x
தினத்தந்தி 25 Oct 2023 6:45 PM GMT (Updated: 25 Oct 2023 6:45 PM GMT)

சீனிவாசப்பூரில் நடந்த காங்கிரஸ் பிரமுகர் கொலை வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோலார் தங்கவயல்:

சீனிவாசப்பூரில் நடந்த காங்கிரஸ் பிரமுகர் கொலை வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

காங்கிரஸ் பிரமுகர் கொலை

கோலார் மாவட்டம் சீனிவாசப்பூரை சேர்ந்தவர் சீனிவாஸ் (வயது 62). இவர் காங்கிரஸ் பிரமுகர் ஆவார். இவர் முன்னாள் சபாநாயகர் ரமேஷ் குமார் மற்றும் போலீஸ் மந்திரி பரமேஸ்வரின் தீவிர ஆதரவாளர் ஆவார். முதலில் ஜனதா தளம் (எஸ்) கட்சியில் இருந்த அவர் பின்னர் காங்கிரசில் சேர்ந்தார். இந்தநிலையில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை கோலார் மாவட்ட பஞ்சாயத்து தலைவராக செயல்பட்டார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சீனிவாசப்பூரில் கட்டப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்வதற்காக சீனிவாஸ் சென்றிருந்தார்.

அப்போது அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் சீனிவாசின் கண்ணில் ெபப்பர் ஸ்பிரேவை அடித்தனர். இதில் சீனிவாஸ் நிலை தடுமாறியதும், மர்மநபர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இந்த கொலை குறித்து வேம்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வந்தனர்.

2 பேர் சுட்டுப்பிடிப்பு

இந்தநிலையில் நேற்று முன்தினம் இந்த கொலையில் தொடர்புடைய மர்மநபர்கள் லட்சுமிசாகர் வனப்பகுதியில் பதுங்கியிருப்பதாக வேம்கல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் பதுங்கி இருந்த வேணுகோபால், மணிந்திரா, சந்தோஷ் ஆகிய 3 பேரை சுற்றி வளைத்து கைது செய்தனர். இவர்களை போலீசார் அங்கிருந்து அழைத்து செல்ல முயன்றனர். அப்போது வேணுகோபால் மற்றும் மணிந்திரா போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோடினர். இதனை பார்த்த வேம்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் தப்பியோடிய 2 பேரையும் துப்பாக்கியால் சுட்டார்.

இதில் 2 பேரும் குண்டடிப்பட்டு சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தனர். தற்போது 2 பேரும் கோலார் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில் கொலை வழக்கில் தொடர்புடையதாக முல்பாகலை சேர்ந்த நாகேந்திரா, கோலார் நகரை சேர்ந்த ஹர்ஷத், வேம்கல் பகுதியை சேர்ந்த அருண் குமார் ஆகியோரை போலீசார் தேடி வந்தனர். நேற்று இவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் 3 பேர் கைது

இதற்கிடையில் கொலை நடந்த இடத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நாராயணா நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த போலீசாரிடம் கொலை குறித்து போலீஸ் சூப்பிரண்டு கேட்டறிந்தார்.

இதையடுத்து நிருபர்களுக்கு பேட்டியளித்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நாராயணா கூறியதாவது:-

காங்கிரஸ் பிரமுகர் சீனிவாஸ் கொலை வழக்கில் தொடர்புடையதாக சீனிவாசப்பூர் டவுன் ஜெகஜீவன் பாளையாவை சேர்ந்த வேணுகோபால் மற்றும் கோலார் நகரை சேர்ந்த மணிந்திரா ஆகியோரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். மேலும் பங்காருபேட்டை தாலுகா அஜ்ஜப்பனஹள்ளியை சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவரும் கைது செய்யப்பட்டார். விசாரணையில் கைதான 3 பேர் கொடுத்த தகவலின் பேரில் மேலும் 3 பேரை போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று முல்பாகலை சேர்ந்த நாகேந்திரா, கோலாரை சேர்ந்த ஹர்ஷத், வேம்கல்ைல சேர்ந்த அருண்குமார் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

இவர்களில் வேணுகோபால் முன்னாள் சபாநாகர் ரமேஷ் குமாரின் ஆதரவாளர் என்று தெரியவந்துள்ளது. மேலும் ரமேஷ் குமாரின் புகைப்படத்தை நெஞ்சில் பச்சை குத்தி வைத்துள்ளார். இதனால் அரசியல் முன்விரோதத்தில் இந்த கொலை நடந்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் கைதான 6 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழு விசாரணை முடிந்த பின்னர் கொலைக்கான காரணம் தெரியவரும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story