கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு: வினாடிக்கு 1.35 லட்சம் கனஅடி நீர் தமிழகம் செல்கிறது


கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு:  வினாடிக்கு 1.35 லட்சம் கனஅடி நீர் தமிழகம் செல்கிறது
x

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்துக்கு வினாடிக்கு 1.35 லட்சம் கன அடி தண்ணீர் செல்கிறது.

மைசூரு:

தென்மேற்கு பருவமழை

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து பெய்து வருகிறது. குறிப்பாக மலைநாடு மாவட்டங்களாக குடகு, சிவமொக்கா, சிக்கமகளூரு, ஹாசன் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் காவிரி, கபிலா உள்பட ஏராளமான ஆறுகளில் காட்டாற்று வெள்ளம் பாய்ந்தோடுகிறது. இதில் குறிப்பிடும்படியாக கர்நாடக அணைகளில் முக்கிய அணையாக கருதப்படும் கிருஷ்ணராஜசாகர்(கே.ஆர்.எஸ்.), கபினி அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கே.ஆர்.எஸ்., கபினி அணைகளுக்கு நீர்வரத்து பன்மடங்கு அதிகரித்துள்ளது.

இதனால், மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி அருகே காவிரியின் குறுக்கே அமைந்துள்ள கே.ஆர்.எஸ். அணை ஏற்கனவே தனது முழு கொள்ளளவான 124.80 அடியை எட்டி நிரம்பிவிட்டது.

கே.ஆர்.எஸ். அணை

ஆனால் தொடர் கனமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து இருந்து வருகிறது. நேற்று மதியம் 12 நிலவரப்படி கே.ஆர்.எஸ். அணைக்கு வினாடிக்கு 87 ஆயிரத்து 462 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 97 ஆயிரத்து 726 கன அடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டு உள்ளது. அணையில் 122.74 அடி தண்ணீர் இருந்தது.

இதுபோல் கபிலா ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கபினி அணைக்கு நீர்வரத்து இருந்து வருகிறது. கடல் மட்டத்தில் இருந்து 2284 அடி தண்ணீர் கொள்ளளவு கொண்ட கபினி அணையில் நேற்று மாலை 6 மணி நிலவரப்படி 2,282.97 கன அடி தண்ணீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 37 ஆயிரத்து 380 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 38 ஆயிரம் கன அடி தண்ணீர் கபிலா ஆற்றில் திறந்து விடப்பட்டு இருக்கிறது.

தமிழகத்துக்கு காவிரியில்...

இவ்விரு அணைகளில் இருந்தும் திறந்து விடப்பட்ட தண்ணீர் ஒன்றாக திருமாகூடலுவில் சங்கமித்து அகன்ற காவிரியாக தமிழகம் செல்கிறது. அதன்படி இவ்விரு அணைகளில் இருந்தும் நேற்று மொத்தம் வினாடிக்கு 1 லட்சத்து 35 ஆயிரத்து 726 கன அடி நீர் தமிழகம் சென்றது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா மற்றும் பாண்டவபுரா தாலுகாக்களில் 40 கிராமங்களில் வெள்ளம் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட 200 ஆண்டுகள் பழமையான வெல்லஸ்லி பாலத்தை தொட்டபடி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. வெள்ளப்பெருக்கு அதிகரித்தால் பாலம் மூழ்கும் அபாயத்தில் உள்ளது. இதனால் வெல்லஸ்லி பாலம் வழியாக போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் செல்ல தடை

காவிரியில் தொடர்ந்து திறக்கப்படும் நீர் அதிகரிக்கப்பட்டு வருவதால் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகாவில் காவிரி ஆற்றங்கரையோரத்தில் ஒரு கிலோ மீட்டர் தூர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லவும், ஆற்றங்கரைக்கு யாரும் செல்லவேண்டாம் என்றும் தாசில்தார் ஸ்வேதா ரவிந்திரா உத்தரவிட்டுள்ளார்.


Next Story