குடகு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை கண்டித்து 26-ந் தேதி காங்கிரஸ் போராட்டம்-சித்தராமையா பேட்டி


குடகு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை கண்டித்து  26-ந் தேதி காங்கிரஸ் போராட்டம்-சித்தராமையா பேட்டி
x

கார் மீது முட்டை வீச்சு சம்பவத்திற்கு குடகு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை கண்டித்து 26-ந் தேதி காங்கிரஸ் போராட்டம் நடத்தும் என்று எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கூறியுள்ளார்.

ஹாசன்:

சித்தராமையா

முன்னாள் முதல்-மந்திரியும், தற்போதைய சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா ஹாசனில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நான், அனைவரையும் சமமாக கருதுகிறேன். பா.ஜனதாவை சேர்ந்தவர்கள் இந்துத்வாவில் நம்பிக்கை கொண்டுள்ளனர். கலவரத்தை தூண்டவேண்டும் என்ற நோக்கில் இதுபோன்ற செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்துத்வா அரசியல் உருவாக்கவேண்டும் என்பது அவர்களின் நோக்கம். இது தவறு. சமுதாயத்தில் அனைத்து மதத்தையும் சரி சமமாக பார்க்கவேண்டும். அனைவருக்கும் பாதுகாப்பு கிடைக்கவேண்டும். என்னுடைய மதம்தான் பெரியது என்று கூற கூடாது.

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பிரவீன் நெட்டார் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறினார். ஆனால் அதேபோல் கொலையான முஸ்லிம் இளைஞர்கள் முகமது பாசில், மசூத் வீடுகளுக்கு ஏன் செல்லவில்லை. வரிபணத்தில் நிதி உதவி அளிப்பது பெரிது அல்ல. அதை அனைவருக்கும் சமமாக வழங்கவேண்டும். நான், குடகு மாவட்டத்திற்கு சென்றபோது பா.ஜனதாவினர் கருப்பு கொடி காண்பித்து கோ பேக் சித்தராமையா என்று கோஷமிட்டனர். இதனால் பா.ஜனதாவிற்கு எந்த லாபமும் இல்லை.

வருகிற 26-ந் தேதி போராட்டம்

மாநிலத்தில் முறையான ஆட்சி நடைபெறவில்லை எனவும், உளவுத்துறை இல்லை என்றும் நினைக்கிறேன். சட்டத்துறை மந்திரி மாதுசாமி, அரசு செயல்படவில்லை என்று கூறியுள்ளார். இதன் அர்த்தம் புரியவில்லை. வரும் தேர்தலில் நான் தோற்றுவிடுவதாக பா.ஜனதா கூறுகிறது. ஆனால் எனது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் கூட்டத்தை பார்த்து பீதியடைந்துள்ளனர்.

குடகு சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிற்கு எதிராக வருகிற 26-ந் தேதி காங்கிரசார் சார்பில் போராட்டம் நடத்தப்படும். ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தள அமைப்பை சேர்ந்தவர்களை பா.ஜனதா ஊக்குவிக்கிறது. அதனால்தான் அந்த இளைஞர்கள் எனக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story