குமாரசாமிக்கு பொது அறிவு இல்லை


குமாரசாமிக்கு பொது அறிவு இல்லை
x

குமாரசாமிக்கு பொது அறிவு இல்லை என்றும், தேவேகவுடாவிடம் இருந்து சிறிதளவாவது அவர் கற்று இருக்க வேண்டும் என்றும் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கடுமையாக தாக்கி பேசினார்.

மைசூரு:-

துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார்

கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் ராமநகர் மாவட்டத்தை பெங்களூருவில் இணைக்க இருப்பதாகவும், இதனால் இனி ராமநகர் மாவட்டத்தில் உள்ள 4 தாலுகாக்களில் வசிக்கும் மக்களும் பெங்களூருவை சேர்ந்தவர்களே என்றும் கூறினார். மேலும் அவர், 'இதற்கு இன்னும் இறுதி வடிவம் கொடுக்கவில்லை. ராமநகர் மாவட்டத்தில் உள்ள மாகடி, கனகபுரா, சென்னப்பட்டணா, ராமநகர் ஆகிய 4 தாலுகாக்களும் பெங்களூருவுக்கு சேர்ந்து விடும். இனிவரும் நாட்களில் இந்த திட்டத்திற்கு இறுதி வடிவம் கொடுக்கப்படும். மேலும் வரைபடமும் வெளியிடப்படும்' என்றார். மேலும் அவர் கூறுகையில், 'ராமநகரில் இருப்பது கொள்ளையடிக்கப்பட்ட நிலம் இல்லை. கனகபுராவில் தங்கம் இருக்கும் நிலத்தை கையகப்படுத்தி அதை கட்டுமான தொழில் அதிபர்களிடம் வழங்குகிறேனா? அல்லது பினாமி நிலத்தில் கோட்டை கட்டுகிறேனா?.

ஆவணங்களை காட்ட முடியுமா?

இந்த திட்டத்திற்கு இறுதி வடிவம் கொடுக்க அவசரம் இல்லை. நான் குமாரசாமி கூறியதைப் பற்றி கவலைப்பட போவதில்லை. நான் செய்யும் செயல் மற்றும் அரசு செயல்படுத்தும் திட்டங்களே முக்கியமானது. ராமநகர் மாவட்டம் தானாக உருவானது இல்லை. பெங்களூரு புறநகர் மாவட்டத்தில் இருந்து கடந்த 2007-ம் ஆண்டு பிரிக்கப்பட்டது தான் ராமநகர் மாவட்டம். ராமநகர் மாவட்டம் தானாக உருவாக்கப்பட்டது போன்று கூறிவரும் குமாரசாமி, அதற்கான ஆவணங்களை காட்ட முடியுமா?.

நான் கோடீஸ்வரனாக வேண்டும் என்ற நோக்கத்தில் ராமநகர் மாவட்டத்தில் உள்ள நிலத்தை கணக்கில் கொண்டு அந்த மாவட்டத்தை பெங்களூருவுடன் இணைக்க நினைப்பதாக பா.ஜனதா பொதுச் செயலாளரும், எம்.எல்.சி.யுமான ரவிக்குமார் விமர்சித்து வருகிறார்.

தேவேகவுடாவுக்கு நன்றாக தெரியும்

இந்த விவகாரத்தில் ஏன் பா.ஜனதா மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சியினர் இவ்வளவு அவசரம் காட்டுகிறார்கள். விஜயதசமி பண்டிகை அன்று மக்களுக்கு என்னுடைய பரிசாக இந்த திட்டத்தை அறிவித்தேன். முன்னாள் முதல்-மந்திரியான குமாரசாமிக்கு பொது அறிவு இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் அவருக்கு பொது அறிவு இல்லை. ராமநகர் மாவட்டத்தின் வரலாறு குறித்து முன்னாள் பிரதமரும், குமாரசாமியின் தந்தையுமான தேவேகவுடாவுக்கு நன்றாக தெரியும்.

அவர் ஒரு மூத்த தலைவர். இந்த விவகாரத்தில் கருத்து தெரிவிப்பதற்கு முன்பு குமாரசாமி, அவரது தந்தை தேவேகவுடாவிடம் இருந்து சிறிதளவாவது கற்று இருக்க வேண்டும். நான் மக்களிடம் பேசியது என்னவென்றால், நாம் தமிழ்நாடு மாநிலத்தின் அருகில் உள்ளோம். மேலும் பெங்களூருவுக்கு மிக அருகாமையில் இருக்கிறோம். அதனால் ராமநகர் மாவட்ட மக்கள் யாரும் தங்களது நிலத்தை விற்க வேண்டாம். அங்கு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள திட்டம் உள்ளது என்று தெரிவித்தேன்' என்று கூறினார்.

கடும் ஆட்சேபனை

ஆனால் இதுபற்றி தனக்கு தெரியாது என்றும், டி.கே.சிவக்குமார் இதுதொடர்பாக தன்னிடம் ஆலோசனை நடத்தவில்லை என்றும் முதல்-மந்திரி சித்தராமையா கூறினார். ராமநகர் மாவட்டத்தை பெங்களூருவுடன் இணைப்பதாக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தெரிவித்த கருத்துக்கு முன்னாள் முதல்-மந்திரியும், ஜனதா தளம்(எஸ்) கட்சியின் மாநில தலைவருமான குமாரசாமி கடும் ஆட்சேபனை தெரிவித்து வருகிறார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், 'ராமநகர் மாவட்டத்தில் உள்ள டி.கே.சிவக்குமாருக்கு சொந்தமான சட்டவிரோத மற்றும் பினாமி நிலத்தை முறைப்படுத்தும் நோக்கத்துடன் ராமநகர் மாவட்டத்தை அவர் பெங்களூருவுடன் இணைக்க திட்டமிட்டு இருப்பதாக கடுமையாக சாடினார்.


Next Story