கர்நாடகத்தில் செயற்கை மின் பற்றாக்குறை-குமாரசாமி விமர்சனம்


கர்நாடகத்தில் செயற்கை மின் பற்றாக்குறை-குமாரசாமி விமர்சனம்
x
தினத்தந்தி 22 Oct 2023 6:45 PM GMT (Updated: 22 Oct 2023 6:46 PM GMT)

தனியார் நிறுவனத்திடம் இருந்து கமிஷன் பெற கர்நாடகத்தில் செயற்கையாக மின் பற்றாக்குறையை ஏற்படுத்தி சதி செய்துள்ளதாக அரசு மீது குமாரசாமி விமர்சனம் செய்துள்ளார்.

பெங்களூரு:-

கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

மக்கள் மறக்கவில்லை

நான் நட்சத்திர ஓட்டலில் இருந்து ஆட்சி நிர்வாகத்தை நடத்தியதாக சித்தராமையா சொல்கிறார். காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி ஆட்சியில் நான் முதல்-மந்திரியாக இருந்தபோது, வேறு ஒருவரின் பெயரில் அரசு பங்களாவை பெற்று அதே பங்களாவில் சித்தராமையா வசித்தார். ஆட்சி மாறினாலும் அந்த பங்களாவை ஏன் காலி செய்யவில்லை?.

அந்த பங்களாவில் அமர்ந்து கூட்டணி ஆட்சிக்கு குழி தோண்டியதை கன்னட மக்கள் மறக்கவில்லை. இந்தியா கூட்டணி கூட்டத்தை நான் தங்கி இருந்ததாக கூறும் நட்சத்திர ஓட்டலில் தான் தானே நடத்தினார்கள். ஏன் வேறு ஓட்டலில் கூட்டத்தை நடத்தி இருக்க வேண்டியது தானே?. வறட்சி, மின்சாரம் இல்லாமல் மக்கள் கஷ்டப்படும் சூழ்நிலையில் அதை பற்றி கவலைப்படாமல் நாள் முழுவதும் கிரிக்கெட் போட்டியை சித்தராமையா பார்த்து ரசித்தார். இது ரோம் நகர் பற்றி எரிந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்த கதையாக உள்ளது.

தவறான ஆட்சி நிர்வாகம்

மின்சார உற்பத்தியை இந்த அரசு அலட்சியப்படுத்தியது ஏன்?. மின் பிரச்சினை எழுந்த பிறகு, மின் உற்பத்தி திட்டங்களை அமல்படுத்தியுள்ளதாக சொன்னால் எப்படி?. கர்நாடகத்தில் அரசு மற்றும் தனியார் மின் உற்பத்தி 29 ஆயிரம் மெகாவாட் செய்ய வேண்டும். ஆனால் அந்த அளவுக்கு மின் உற்பத்தி செய்யப்படாதது ஏன்?. நீர் மின் உற்பத்தி பாதிக்கப்படும் என்று தெரிந்தும், போதுமான நிலக்கரியை இருப்பு வைக்காதது ஏன்?.

நீர் மின் உற்பத்தி தவிர்த்து பிற ஆதாரங்கள் மூலமான மின் உற்பத்திக்கு வறட்சி தான் காரணமா?. அல்லது உங்களின் தவறான ஆட்சி நிர்வாகம் காரணமா?. நான் மீண்டும் சொல்கிறேன், நீங்கள் செயற்கையாக மின் பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளீர்கள். இது உங்களின் சதி. தனியாா் நிறுவனத்திடம் இருந்து மின்சாரம் வாங்கினால் அதில் 'கமிஷன்' அதிகம் கிடைக்கிறது. மின்சார உற்பத்தி குறித்து இந்த அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். அதிகளவில் மின்சாரம் வாங்குவதால் அதிக கமிஷன் கிடைக்கும் என்ற மகிழ்ச்சியில்

இந்த ஆட்சியாளர்கள் உள்ளனர்.

இவ்வாறு குமாரசாமி

கூறினார்.


Next Story