செல்போன் வாங்கி கொடுக்காததால் தாய் படுகொலை: வாலிபர் கைது


செல்போன் வாங்கி கொடுக்காததால் தாய் படுகொலை: வாலிபர் கைது
x

பெங்களூருவில் செல்போன் வாங்கி கொடுக்காததால் சேலையால் கழுத்தை இறுக்கி பெண் கொலை செய்யப்பட்டார். இதுதொடா்பாக தலைமறைவாக இருந்த மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.

பெங்களூரு:

கழுத்தை இறுக்கி கொலை

பெங்களூரு பேகூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட மைலசந்திரா கிராமத்தை சேர்ந்தவர் பாதீமா மேரி(வயது 50). இவரது மகன் தீபக்(23). மைலசந்திரா கிராமத்திலேயே பாதீமா மேரிக்கு சொந்தமான விவசாய தோட்டம் உள்ளது. அங்கு கீரை மற்றும் பிற பயிர்களை அவர் பயிரிட்டு இருந்தார். கடந்த சில நாட்களாக தோட்டத்தில் விளைந்துள்ள கீரையை எடுத்து பாதீமா மேரி விற்பனை செய்து வந்தார்.

அதன்படி, கடந்த 1-ந் தேதி மாலையில் அவர் கீரையை எடுக்க சென்றார். அப்போது தன்னுடன் வேலை பார்க்க மகன் தீபக்கையும் அவர் அழைத்து சென்றிருந்தார். தோட்டத்தில் வைத்து தாய், மகன் இடையே திடீரென்று வாக்குவாதம் உண்டானது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த தீபக், பெற்ற தாய் என்று கூட பார்க்காமல் பாதீமா மேரியின் கழுத்தை சேலையால் இறுக்கி கொலை செய்ததாக கூறப்படுகிறது.

மகன் கைது

பின்னர் தோட்டத்தில் இருந்து அவர் தப்பி ஓடிவிட்டார். நேற்று முன்தினம் தோட்டத்தில் பாதீமா மேரி கொலை செய்யப்பட்டு கிடப்பது பற்றி பேகூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் விரைந்து சென்று, அவரது உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது பாதீமா மேரியிடம் விலை உயர்ந்த செல்போன் வாங்கி கேட்டு அதற்கான பணத்தை கொடுக்கும்படி தீபக் சண்டை போட்டு வந்துள்ளார். ஆனால் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று அவர் கூறி விட்டதாக தெரிகிறது.

இதனால் ஏற்பட்ட தகராறில் பாதீமா மேரியை கொலை செய்துவிட்டு, அவரிடம் இருந்த ரூ.700-ஐ எடுத்து கொண்டு தீபக் தலைமறைவானது தெரியவந்தது. இதுகுறித்து பேகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த தீபக்கை கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story