குண்டலுபேட்டை அருகே விவசாயிகளை தாக்கிய புலி பிடிபட்டது


குண்டலுபேட்டை அருகே விவசாயிகளை தாக்கிய புலி பிடிபட்டது
x

குண்டலுபேட்டை அருகே விவசாயிகளை தாக்கிய புலியை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர்.

கொள்ளேகால்:

புலி தாக்கியது

சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகா கடச்சினா கிராமத்தை சேர்ந்தவர் கவியப்பா. விவசாயி. இவரது விளைநிலம் பந்திப்பூர் வனச்சரணாலய பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை கவியப்பா தனது தோட்டத்தில் விவசாய பணியில் ஈடுபட்டு இருந்தார். அந்த சமயத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய புலி ஒன்று, அவரது தோட்டத்தில் புகுந்து மேய்ச்சலுக்கு விட்டிருந்த மாட்டை தாக்கி கொல்ல முயன்றது.

இதை பார்த்த கவியப்பா மாட்டை காப்பாற்ற புலியை விரட்டியடிக்க முயன்றார். அப்போது புலி அவரை தாக்கியது. அவர் புலியுடன் கட்டிப்புரண்டு சண்டையிட்டார். இந்த சத்தம் கேட்டு பக்கத்து தோட்டத்தை சேர்ந்த கோபாலபுரா கிராமத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவரும் விரைந்து வந்து புலியை விரட்ட முயன்றார். அவரையும் புலி தாக்கியது.

விவசாயிகள் காயம்

பின்னர் கவியப்பா, ராஜசேகர் இருவரும் சேர்ந்து தடியால் புலியை விரட்டியடித்தனர். அந்த புலி அதே பகுதியை சேர்ந்த சிவபசப்பா என்பவரின் வாழை தோப்புக்குள் பதுங்கிக்கொண்டது. இதில் படுகாயமடைந்த இருவரும் மைசூரு கே.ஆர். அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கிடையே புலி தாக்கியதில் படுகாயமடைந்த மாடு சம்பவ இடத்திலேயே செத்தது.

இதையடுத்து கடச்சினபுரா, கோபாலபுரா கிராம மக்கள் மாட்டை வேட்டையாடி கொன்று, 2 விவசாயிகளையும் தாக்கிய புலியை உடனே பிடிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்களை சமாதானப்படுத்திய பந்திப்பூர் வனத்துறையினர், புலியை பிடிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

மேலும் புலியை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் நேற்று முன்தினம் மாலை வரை நடந்த தேடுதல் வேட்டையில் வனத்துறையினரிடம் புலி சிக்கவில்லை.

மயக்க ஊசி செலுத்தி...

இந்த நிலையில் நேற்று காலை மீண்டும் புலியை தேடும் பணியில் வனத்துறையினர் மும்முரமாக ஈடுபட்டனர். இந்த பணிக்காக அபிமன்யூ, ஸ்ரீகாந்த் ஆகிய 2 கும்கி யானைகளும் வரவழைக்கப்பட்டது. அதிகாலை 6 மணிக்கே தேடுதல் பணி தொடங்கியது. குறிப்பாக வாழைத்தோட்டத்திற்குள் 20-க்கும் மேற்பட்ட வனத்துறையினர், 2 கும்கி யானைகள் உதவியுடன் அங்குலம் அங்குலமாக சல்லடை போட்டு தேடினர்.

சுமார் 3 மணி நேர தீவிர தேடுதல் வேட்டையில் புலி ஒரு புதரில் பதுங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி புலிக்கு, கால்நடை மருத்துவர் துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தினார். ஆனால் புலி மயங்கவில்லை. 3 மயக்க ஊசி செலுத்திய பிறகே புலி மயங்கியது. உடனே அங்கு கூடியிருந்த வனத்துறையினர் உடனடியாக வலையை புலி மீது வீசி பிடித்தனர்.

கண்ணில் காயம்

பிடிபட்ட புலிக்கு இடது கண்ணில் பலத்த ரத்த காயம் இருந்தது. விவசாயிகளை தாக்கிய போது அவர்கள் திருப்பி அடித்ததில் புலிக்கு காயம் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதனால் புலிக்கு சிகிச்சை அளிக்க மைசூரு மாவட்டம் கூர்ஹள்ளி வனவிலங்குகள் மறுவாழ்வு மையத்திற்கு ஒரு வாகனத்தில் ஏற்றி கொண்டு சென்றனர். பிடிபட்ட புலிக்கு 10 வயது இருக்கும் என்றும், அது பெண் புலி என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர். அட்டகாசம் செய்த புலி பிடிபட்டதால் கிராம மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.


Next Story