தனியார் நிறுவன ஊழியரை தாக்கி கொள்ளை: தலைமறைவாக இருந்த வாலிபர் கைது


தனியார் நிறுவன ஊழியரை தாக்கி கொள்ளை:  தலைமறைவாக இருந்த வாலிபர் கைது
x

பெங்களூருவில் தனியார் நிறுவன ஊழியரை தாக்கி கொள்ளை வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூரு:

பெங்களூரு மாரகொண்டனஹள்ளியை சேர்ந்தவர் தருண் அகர்வால். இவர், தனியார் நிறுவன ஊழியர். இவர், இரவு வேலை முடிந்ததும் பல்வேறு பகுதிகளில் சுற்றித்திரியும் தெருநாய்களுக்கு தனது ஸ்கூட்டரில் சென்று உணவு வழங்குவது வழக்கம். அதுபோல், கடந்த மாதம் (மே) 18-ந் தேதி ராமமூர்த்திநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தெருநாய்களுக்கு உணவு வழங்கி விட்டு ஸ்கூட்டரில் தருண் வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது ஒரு நபர் தருணை வழிமறித்து பெட்ரோல் இல்லாமல் மோட்டார் சைக்கிள் நிற்பதாகவும், சிறிது பெட்ரோல் கொடுக்கும்படியும் உதவி கேட்டார். உடனே அவரும், மர்மநபருக்கு உதவி செய்ய முன்வந்தார். அப்போது அந்த மர்மநபர், தருணை ஆயுதங்களால் தாக்கிவிட்டு, பணம் மற்றும் ஸ்கூட்டரை கொள்ளையடித்து சென்றிருந்தார். இதுகுறித்து ராமமூர்த்திநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தேடிவந்தனர்.

இந்த நிலையில், தருணை தாக்கி ஸ்கூட்டரை கொள்ளையடித்ததாக உரமாவு அருகே வினாயகா லே-அவுட்டை சேர்ந்த பிரசாந்த் (வயது 25) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து தருணிடம் கொள்ளையடித்த ஸ்கூட்டர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைதான பிரசாந்த் மீது ராமமூர்த்திநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Next Story