தகுதியானவர்களுக்கு ராஜ்யோத்சவா விருது; முதல்-மந்திரி சித்தராாமையா உத்தரவு


தகுதியானவர்களுக்கு ராஜ்யோத்சவா விருது; முதல்-மந்திரி சித்தராாமையா உத்தரவு
x
தினத்தந்தி 26 Oct 2023 6:45 PM GMT (Updated: 26 Oct 2023 6:46 PM GMT)

தகுதியானவர்களுக்கு ராஜ்யோத்சவா விருது கிடைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.

பெங்களூரு:

கர்நாடகம் உதயமான நாளான நவம்பர் 1-ந் தேதி ஒவ்வொரு ஆண்டும் ராஜ்யோத்சவாவாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அன்றைய தினம் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு ராஜ்யோத்சவா விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. இந்த நிலையில் வருகிற 1-ந் தேதி கன்னட ராஜ்யோத்சவா கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி ராஜ்யோத்சவா விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்வது தொடர்பாக கன்னட கலாசாரத்துறை அதிகாரிகளுடன் முதல்-மந்திரி சித்தராமையா பெங்களூருவில் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் அத்துறை மந்திரி சிவராஜ் தங்கடகி உள்பட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் சித்தராமையா பேசியதாவது:-

இந்த ஆண்டு 68 ராஜ்யோத்சவா விருதுகள் வழங்கப்படும். கர்நாடகம் என்று பெயர் சூட்டி 50 ஆண்டுகள் ஆவதையொட்டி கன்னட மொழிக்காக உழைக்கும் அமைப்புகளுக்கு 10 விருதுகள் ஒதுக்கப்படும். விருதுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதனால், கர்நாடக மாநிலம் அமைந்து எத்தனை ஆண்டுகள் ஆகிறதோ அத்தனை விருதுகள் மட்டும் வழங்கினால் போதும் என்று முன்பு முடிவு செய்யப்பட்டது. மண்டல நீதி, சமூக நீதி, தகுதி, திறமையானவர்களுக்கு விருது வழங்கப்பட வேண்டும். அனைத்து தரப்பினருக்கும் உரிய நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.


Next Story