துங்கபத்ரா, பசவசாகர் அணைகளில் இருந்து வினாடிக்கு 1½ லட்சம் கனஅடி நீர் திறப்பு: கோவில்கள் மூழ்கின

துங்கபத்ரா, பசவசாகர் அணைகளில் இருந்து வினாடிக்கு 1½ லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டதால் கிருஷ்ணா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
பெங்களூரு:
தண்ணீர் திறப்பு
மராட்டியத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக கொய்னா அணையில் இருந்து கிருஷ்ணா ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் கர்நாடகத்தில் கிருஷ்ணா ஆற்றின் குறுக்கே இருக்கும் துங்கபத்ரா, பசவசாகர் அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து உள்ளது. இதனால் அணைகளில் இருந்து கிருஷ்ணா ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.
பசவசாகர் அணையில் இருந்து 15 மதகுகள் வழியாக நேற்று வினாடிக்கு ஒரு லட்சத்து 11 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. துங்கபத்ரா அணையில் இருந்து 30 மதகுகள் வழியாக வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் கிருஷ்ணா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
கோவில் மூழ்கியது
இதன்காரணமாக ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மேலும் பாதுகாப்பான இடத்திற்கு செல்லும்படி மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கிருஷ்ணா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கம்பளி-கங்காவதி சாலையில் உள்ள பாலத்தை மூழ்கடித்தப்படி தண்ணீர் செல்கிறது. இதனால் அந்த பாலத்தின் மீது மக்கள் செல்வதை தடுக்க போலீசார் இரும்பு தடுப்பு கம்பி வைத்து உள்ளனர். ராய்ச்சூர் மாவட்டம் கட்டேஹீலி கிராமத்தில் கிருஷ்ணா ஆற்றின் கரையோரம் உள்ள பசவேஸ்வரா கோவில் தண்ணீரில் மூழ்கியுள்ளது.
இதுபோல கொப்பல் மாவட்டம் ஆனேகுந்தியில் கிருஷ்ணா ஆற்றுக்குள் இருக்கும் புராதன சின்னமான கிருஷ்ணதேவராயா மண்டபமும் தண்ணீரில் மூழ்கி உள்ளது. பெலகாவியில் கட்டபிரபா ஆற்றில் ஏற்பட்டு உள்ள வெள்ளப்பெருக்கால் சிக்கோடி தாலுகா கல்லூரு கிராமத்தில் உள்ள தத்தா கோவில் மூழ்கியுள்ளது. யாதகிரியில் பெய்து வரும் கனமழை காரணமாக ஸ்டேஷன் பஜார் ரோட்டில் உள்ள அரசு உருது பள்ளியில் தண்ணீர் புகுந்து உள்ளது. மேலும் பள்ளியின் மேற்கூரையில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இதனால் ஆசிரியர்கள், மாணவர்கள் பீதியில் உள்ளனர்.






