பிரபல வாஸ்து நிபுணர் சந்திரசேகர் குருஜி படுகொலை: தப்பி செல்ல முயன்ற 2 பேர் துப்பாக்கி முனையில் கைது
உப்பள்ளியில் பிரபல வாஸ்து நிபுணர் சந்திரசேகர் குருஜி படுகொலை செய்யப்பட்டார். தப்பி செல்ல முயன்ற 2 பேரை போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.
உப்பள்ளி:
வாஸ்து நிபுணர் சந்திரசேகர் குருஜி
கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டத்தை போடகிகல்லு பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் குருஜி (வயது 59). இவர் பிரபல வாஸ்து நிபுணர் ஆவார். வீடு கட்டவும், பல்வேறு சுபகாரியங்களுக்கும் இவரிடம் ஏராளமானோர் வாஸ்து பார்த்து வந்தார். மேலும் பல்வேறு டி.வி. நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று பொதுமக்களுக்கு வாஸ்து கூறி வந்தார். இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி மூலம் ஒரு மகள் உள்ளார். அவரது முதல் மனைவி இறந்துவிட்டார்.
இந்த நிலையில் கடந்த 2-ந்தேதி உப்பள்ளி உன்கல்லுக்கு சந்திரசேகர் குருஜி வந்தார். அவர், அங்குள்ள ஒரு தனியார் ஓட்டலில் அறை எடுத்து தங்கியிருந்தார். இந்த நிலையில் நேற்று தனியார் ஓட்டலுக்கு வந்த 2 பேர், சந்திரசேகர் குருஜியிடம் ஆசி வாங்க வேண்டும் என்று கூறினர்.
சரமாரி கத்திக்குத்து
இதையடுத்து அவர்களை வரவேற்பு அறையில் காத்திருக்கும்படியும் தான் வருவதாகவும் தெரிவித்தார். அதன்படி சந்திரசேகர் குருஜி, அறையில் வரவேற்பு அறைக்கு வந்து தன்னை பார்க்க வந்தவர்களை சந்தித்தார். அப்போது அவர்களில் ஒருவர் சந்திரசேகர் குருஜியிடம் ஆசி பெறுதவற்காக காலில் விழுந்தார். அந்த சமயத்தில் மற்றொரு நபர், தான் வைத்திருந்த கத்தியால் சந்திரசேகர் குருஜியை சரமாரியாக குத்தினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், அங்கிருந்து தப்பியோட முயன்றார். ஆனாலும் காலில் ஆசி வாங்குவது போல் விழுந்த நபர், அவரை கீழே தள்ளிவிட்டு அவரும் கத்தியால் சரமாரியாக குத்தினார்.
இருவரும் சேர்ந்து சந்திரசேகர் குருஜியை சகட்டு மேனிக்கு குத்தினார்கள். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் துடி,
துடித்தார். இதையடுத்து மர்மநபர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பியோடினார்கள். கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால், ஓட்டலின் வரவேற்பு அறையில் இருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.
சாவு
இதையடுத்து அங்கிருந்தவர்கள் விரைந்து வந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய சந்திரசேகர் குருஜியை மீட்டு உப்பள்ளி கிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனாலும் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் தார்வார்-உப்பள்ளி மாநகர போலீஸ் கமிஷனர் லாபுராம், துணை போலீஸ் கமிஷனர் சாஹில், வித்யாநகர் போலீசார் சம்பவம் நடந்த தனியார் ஓட்டலுக்கு விரைந்து சென்றனர்.
பின்னர் போலீசார், சந்திரசேகர் குருஜியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார்,
தனியார் ஓட்டலில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும், அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை கைப்பற்றி ஆய்வு செய்தனர். இதையடுத்து போலீசார் அதில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். மேலும் மர்மநபர்களை பிடிக்க 5 தனிப்படை அமைத்து போலீஸ் கமிஷனர் லாபுராம் உத்தரவிட்டார்.
2 பேர் கைது
அதன்பேரில் தனிப்படை போலீசார் மர்மநபர்களை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் சந்திரசேகர் குருஜி கொலையில் தொடர்புடைய 2 பேர் பெலகாவி மாவட்டம் ராமதுர்கா பகுதியில் காரில் தப்பி செல்வதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் விரைந்து சென்று காரில் சென்ற 2 பேரை துப்பாக்கி முனையில் மடக்கி பிடித்தனர்.
பின்னர் அவர்களை போலீசார் கைது செய்து உப்பள்ளிக்கு அழைத்து வந்தனர். விசாரணையில், கைதானவர்கள் கலபுரகியை சேர்ந்த மகாந்தேஷ், மஞ்சுநாத் என்பது தெரியவந்தது. அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
முன்விரோதம்
அதாவது, கடந்த 2016-ம் ஆண்டு மகாந்தேஷ், சந்திரசேகர் குருஜியிடம் வேலைக்கு சேர்ந்தார். அவரை தொடர்ந்து வனஜாக்ஷி
மற்றும் மஞ்சுநாத் ஆகியோர் வேலைக்கு அவரிடம் வேலைக்கு சேர்ந்தனர். அப்போது வனஜாக்ஷிக்கும், மகாந்தேசுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவர்களுக்கு கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் செய்து வைத்தார். இந்த நிலையில் வனஜாக்ஷியும், மகாந்தேசும் சந்திரசேகர் குருஜியின் பினாமியாக இருந்து வந்தனர். சந்திரசேகர் குருஜி, அவர்கள் பெயரில் சொத்துகளை வாங்கி வந்தார்.
இந்த நிலையில், சந்திரசேகர் குருஜியின் சொத்துகளை அபகரிக்க திட்டமிட்ட வனஜாக்ஷி, மகாந்தேஷ் மற்றும் மஞ்சுநாத் ஆகிய 3 பேரும், வேலையில் இருந்து நின்றுவிட்டனர். இதனால், அவர்கள் பெயரில் உள்ள சொத்துகளை சந்திரசேகர் குருஜி திரும்ப கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு முன்விரோதம் ஆனது. மேலும் சந்திரசேகர் குருஜி, அவர்கள் 3 பேருக்கும் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதனால் அவர்கள் 3 பேரும் சேர்ந்து சந்திரசேகர் குருஜியை திட்டமிட்டு தீர்த்துக்கட்டியது தெரியவந்தது.
மேலும் ஒருவர் கைது
இந்த கொலையில் தொடர்புடைய மகாந்தேசின் மனைவி வனஜாக்ஷியையும் போலீசார் கைது செய்தனர். கைதான 3 பேர் மீதும் வித்யாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
40 நொடியில் 60 முறை கத்தியால் குத்தினர்
உப்பள்ளி தனியார் ஓட்டலில் இருந்த சந்திரசேகர் குருஜியை, வரவேற்பு அறைக்கு வரவழைத்து மஞ்சுநாத்தும், மகாந்தேசும் கத்தியால் குத்தி கொலை செய்தனர். அவர்கள் 40 நொடியில் 60 முறை அவரை கத்தியால் குத்தி உள்ளனர். இது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த பதைபதைக்கும் வீடியோகாட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.








