மாரிக்குப்பம் ரிவீட்டர்ஸ் லைன் பகுதியில் பொதுமக்களிடம் குறைகேட்ட ரூபா கலா சசிதர் எம்.எல்.ஏ.

கோலார் தங்கவயலில் மாரிக்குப்பம் பகுதியில் உள்ள பகுதியில் பொதுமக்களிடம் குறைகேட்ட ரூபா கலா சசிதர் எம்.எல்.ஏ குடிநீர் சுத்திகரிப்பு மையத்தை திறந்து வைத்தார்.
கோலார் தங்கவயல்:
கோலார் தங்கவயல் மாரிக்குப்பம் பகுதியில் உள்ள ரிவீட்டர்ஸ் லைன் பகுதியில் ரூபா கலா சசிதர் எம்.எல்.ஏ. குறைகேட்பு கூட்டம் நடத்தினார். இதில். ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு தங்களின் குறைகளை எடுத்துக்கூறினார்கள். இதைதொடர்ந்து ரூபா கலா சசிதர் எம்.எல்.ஏ. பேசியதாவது:-
ரிவீட்டர்ஸ் லைனில் இருந்து ரோட்ஜஸ் கேம்ப் கல்லறை வரை செல்லும் சாலையை புதுப்பிக்க ரூ.30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இந்த பகுதியில் இரவு நேரத்தில் பெண்கள் உள்ளிட்டோர் தங்களது சொந்த வேலைக்கு சென்றுவர ரூ.3 லட்சம் செலவில் ஹைமார்ஸ் விளக்கு அமைக்கப்படும். பழுதடைந்துள்ள விளையாட்டு மைதானம் புதுப்பித்து தரப்படும். குடிநீருக்காக அவதிப்படுவதை தடுக்கும் நோக்கத்தில் ரூ.7 லட்சம் செலவில் புதிய குடிநீர் சுத்தகரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
இதற்கிடையே அவர், நகரசபை அதிகாரிகளை அழைத்து இந்த பகுதிகளில் உள்ள இடங்களில் முள் புதர்களை அகற்றுவதுடன் நாள்தோறும் கால்வாயை சுத்தம் செய்து குப்பை கழிவுகளை வீடுகளில் இருந்து சேகரிக்கவேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் அவர், புதிதாக அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு மையத்தை திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். இந்த நிகழ்ச்சியில் நகரசபை தலைவர் வள்ளல் முனிசாமி, நகரசபை கமிஷனர் நவீன் சந்திரா, கவுன்சிலர் ரமேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.






