சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு வழக்கு: தலைமறைவாக இருந்த மேலும் ஒருவர் கைது


சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு வழக்கு:  தலைமறைவாக இருந்த மேலும் ஒருவர் கைது
x

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு வழக்கில் தலைமறைவாக இருந்த மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

பெங்களூரு:

4-வது இடம் பிடித்தவர்

கர்நாடகத்தில் 545 சப்-இன்ஸ்பெக்டர்கள் பணிகளுக்கு நடந்த தேர்வில் முறைகேடு நடந்தது பற்றி சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் கலபுரகியை சேர்ந்த பா.ஜனதா பெண் பிரமுகர் திவ்யா, அப்சல்புரா பிளாக் காங்கிரஸ் தலைவர் மகாந்தேஷ், அவரது சகோதரர் ருத்ரேகவுடா பாட்டீல், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் உள்பட 50-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து உள்ளனர். இந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் 4-வது இடம் பிடித்த ஜக்ருத் என்பவரின் தேர்வு வினாத்தாளில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதனால் ஜக்ருத்தின் தேர்வு வினாத்தாளை தடய அறிவியல் மையத்திற்கு போலீசார் அனுப்பி வைத்து இருந்தனர். அப்போது தேர்வில் முறைகேடு செய்து ஜக்ருத் வெற்றி பெற்றது தெரியவந்தது. இதனால் அவரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

10 நாட்கள் போலீஸ் காவல்

இதுபற்றி அறிந்ததும் ஜக்ருத் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். இந்த நிலையில் கேரளாவில் தலைமறைவாக இருந்த ஜக்ருத்தை நேற்று போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அரசு ஊழியர் ஒருவர் மூலம் சட்டவிரோதமாக தேர்வு எழுதி ஜக்ருத் வெற்றி பெற்றது தெரியவந்தது. இதன்பின்னர் ஜக்ருத்தை பெங்களூரு 1-வது கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்டன் கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் அவரை 10 நாட்கள் தங்களது காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் முறைகேடு நடந்தது பற்றி தெரியவந்ததால் அரசு மறுதேர்வு நடத்தப்படும் என்று அறிவித்த போது, இதனை எதிர்த்து பெங்களூரு சுதந்திர பூங்காவில் தேர்வு எழுதியவர்கள் போராட்டம் நடத்தினர். அந்த போராட்டத்தில் ஜக்ருத்தும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story