மண்டியாவில் தொழிற்படிப்புகளுக்கான பொது நுழைவு தேர்வு வருகிற 16, 17-ந் தேதிகளில் நடக்கிறது


மண்டியாவில் தொழிற்படிப்புகளுக்கான பொது நுழைவு தேர்வு வருகிற 16, 17-ந் தேதிகளில் நடக்கிறது
x

மண்டியாவில் தொழிற்படிப்புகளுக்கான பொது நுழைவு தேர்வு வருகிற 16 மற்றும் 17-ந் தேதிகளில் நடப்பதாக மாவட்ட கலெக்டர் அஸ்வதி உத்தரவிட்டுள்ளார்.

மண்டியா:

10 மையங்களில் தேர்வு

மண்டியா மாவட்டத்தில் தொழிற்படிப்புகளுக்கான பொது நுழைவு தேர்வு நடைபெறுவதையொட்டி அதற்கான ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் மாவட்ட கலெக்டர் அஸ்வதி ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர் கூறியதாவது:-

மண்டியா மாவட்டத்தில் தொழிற்படிப்புகளுக்கான பொது நுழைவு தேர்வு வருகிற 16, 17-ந் தேதிகளில் நடைபெறுகிறது. இதில் 4,500 மாணவர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுத்த இருக்கிறார்கள். இதற்காக 10 தேர்வு மையங்கள் தயார் நிலையில் உள்ளது. இந்த தேர்வு மையங்களில் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ள மண்டியா தாலுகாவை சேர்ந்த 2 பேர் மற்றும் கே.ஆர். பேட்டையை சேர்ந்த ஒரு அதிகாரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்வில் எந்தவிதமான முறைகேடும் நடைபெறாமல் அதிகாரிகள் பார்த்து கொள்ளவேண்டும். மேலும் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்கவேண்டும். இதற்கான பொறுப்பு தேர்வு மைய அதிகாரிகளுக்கு உள்ளது.

முக கவசம் கட்டாயம்

கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் மாணவர்கள் மற்றும் தேர்வு மைய அதிகாரிகள் சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும். முக கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். மேலும் தேர்வு எழுத வரும் மாணவர்கள் கைக்கெடிகாரம், செல்போன் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் பொருட்களை கொண்டு வர அனுமதி இல்லை. இதை தேர்வு மைய அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க தேர்வு மையத்தை சுற்றி 200 மீட்டர் சுற்றளவுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story