மதுகுடிக்க பணம் இல்லாததால் பச்சிளம் குழந்தையை ரூ.50 ஆயிரத்துக்கு விற்ற தாத்தா


மதுகுடிக்க பணம் இல்லாததால் பச்சிளம் குழந்தையை ரூ.50 ஆயிரத்துக்கு விற்ற தாத்தா
x

தாவணகெரே அருகே மதுகுடிக்க பணம் இல்லாததால் பச்சிளம் குழந்தையை அதன் தாத்தா ரூ.50 ஆயிரத்துக்கு விற்ற கொடூர சம்பவம் நடந்துள்ளது. குழந்தையை விற்ற அவர் அது இறந்துவிட்டதாக கூறி மற்றவர்களிடம் நாடகமாடியதும் அம்பலமாகி உள்ளது.

சிக்கமகளூரு:

குடிப்பழக்கம்

தாவணகெரே மாவட்டம் சாமனூர் அருகே உள்ள கேசவமூர்த்தி படாவனே பகுதியை சேர்ந்தவர் பசவண்ணா(வயது 65). இவருக்கு பிரசாந்த் என்ற மகனும், சுஜாதா என்ற மகளும் உள்ளனர். இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார்.

இந்த நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான இவர் அப்பகுதியில் உள்ளவர்களிடம் கடன் வாங்கி குடித்து வந்துள்ளார். இவரது மகள் சுஜாதா திருமணமாகி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.

பெண் குழந்தை

இந்த நிலையில் சுஜாதா பிரசவத்திற்காக தாவணகெரேவில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு அழகான பெண் குழந்ைத பிறந்தது. குழந்தை பிறந்து 2 நாட்களே ஆன நிலையில், சுஜாதாவும், அவரது குழந்தையும் ஆஸ்பத்திரியில் உள்ள சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். அங்கு சுஜாதாவும், அவரது குழந்தையும் இருந்தனர். அவர்களுக்கு துணையாக பசவண்ணா இருந்தார்.

இந்த நிலையில் சுஜாதாவின் பெண் குழந்தை திடீரென மாயமானது. இதுகுறித்து பசவண்ணாவிடம் உறவினர்கள் கேட்டபோது அவர் குழந்தை இறந்து விட்டதாகவும், அதனால் குழந்தையை குப்பைத்தொட்டியில் போட்டு மூடிவிட்டதாகவும் கூறியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த அவரது மகன் பிரசாந்த், இதுகுறித்து தாவணகெரே மகளிர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் பசவண்ணாவிடம் விசாரணை நடத்தினர்.

கைது

விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது பசவண்ணா தன்னிடம் குடிப்பதற்கு பணம் இல்லாத காரணத்தால் நேற்று முன்தினம் தனது பேத்தியான பச்சிளம் குழந்தையை துமகூருவை சேர்ந்த ஒரு தம்பதிக்கு ரூ.50 ஆயிரத்திற்கு விற்று விட்டதும், குழந்தை பற்றி ேகட்டபோது அவர் அது இறந்துவிட்டதாக கூறி தனது குடும்பத்தினர் மற்றும் மற்றவர்களிடம் நாடகமாடியதும் தெரியவந்தது.

இதையடுத்து பசவண்ணாவை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரிடம் இருந்து குழந்தையை வாங்கிய தம்பதியையும் போலீசார் தேடி வருகின்றனர். குழந்தையை பறிகொடுத்த சுஜாதா தற்போது பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அதிகாரிகள் பாதுகாப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.


Next Story