மரிகவுடா சிலையைமுதல்-மந்திரி சித்தராமையா திறந்து வைத்தா


மரிகவுடா சிலையைமுதல்-மந்திரி சித்தராமையா திறந்து வைத்தா
x
தினத்தந்தி 25 Oct 2023 6:45 PM GMT (Updated: 25 Oct 2023 6:47 PM GMT)

மைசூரு கர்ஜன் பார்க்கில் 12 அடி மரிகவுடா சிலையை முதல்-மந்திரி சித்தராமையா திறந்து வைத்தார்.

மைசூரு:

மைசூரு கர்ஜன் பார்க்கில் 12 அடி மரிகவுடா சிலையை முதல்-மந்திரி சித்தராமையா திறந்து வைத்தார்.

தசரா விழா

மைசூரு தசரா விழா நேற்று முன்தினத்துடன் நிறைவு பெற்றது. இந்த தசரா விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தசராவின் நிறைவு நிகழ்ச்சியான ஜம்பு சவாரி ஊர்வலத்தை 6 லட்சத்துக்கும் மேற்பட்ேடார் கலந்து கொண்டு ரசித்தனர். இந்த ஜம்பு சவாரி ஊர்வலத்தை முதல்-மந்திரி சித்தராமையா தொடங்கி வைத்தார். இந்தநிலையில், மைசூரு அரண்மனை வளாகத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் வளாகம் அருகே உள்ள கர்ஜன் பார்க்கில் தோட்டக்கலையை உருவாக்கிய மரிகவுடாவின் 12 அடி சிலை திறப்பு விழா நடந்தது. இதனை முதல்-மந்திரி சித்தராமையா திறந்து வைத்தார்.

பின்னர் சிலைக்கு மலர் தூவி அவர் மரியாதை செலுத்தினார். அப்போது முதல்-மந்திரி சித்தராமையா பேசுகையில், மரிகவுடாவின் 12 அடி சிலை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்டது. மைசூரு டவுன் பகுதியில் பூங்காக்கள் எதற்காக இருக்க வேண்டும். அதனால் பொதுமக்களுக்கு என்ன பயன், பூங்காக்களின் அழகு எப்படி இருக்கும் என்பதை உருவாக்கியவர் தான் மரிகவுடா.

12 அடி சிலை

அவரை பற்றி பொதுமக்கள் தெரிந்து கொள்ளவே கர்ஜன் பார்க்கில் சிலை வைக்கப்பட்டுள்ளது, என்றார். சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட மாவட்ட பொறுப்பு மந்திரி எச்.சி. மகாதேவப்பா கூறுகையில், மைசூரு மாவட்ட பஞ்சாயத்து நிர்வாகம், தோட்டக்கலைத்துறை சார்பில் 12அடி உயரமுள்ள மரிகவுடாவின் ஒரு டன் எடையுள்ள வெண்கல சிலை திறக்கப்பட்டுள்ளது. இந்த சிலை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே திறக்கப்பட வேண்டியது.

ஆனால் பல்வேறு காரணங்களால் சிலை திறப்பு விழா தள்ளி வைக்கப்பட்டது. தற்போது மரிகவுடா சிலையை திறக்க காங்கிரஸ் அரசு முன் வந்துள்ளது, என்றார். இந்த நிகழ்ச்சியில், தோட்டக்கலை துறை மந்திரி எஸ்.எஸ். மல்லிகார்ஜுன், மைசூரு மாநகராட்சி மேயர் சிவகுமார், எம்.எல்.ஏ.க்கள் கே. ஹரிஷ் கவுடா, ஸ்ரீவத்ஷா, பி.ரவிசங்கர், எம்.எல்.சி.க்கள் டி. திம்மையா, சி.என். மஞ்ஜேகவுடா, மாவட்ட கலெக்டர் கே.வி. ராஜேந்திரா, மாநகர போலீஸ் கமிஷனர் ரமேஷ், மாவட்ட பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி காயத்ரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

லிங்கபுதி குளக்கரை

முன்னதாக முதல்-மந்திரி சித்தராமையா ராமகிருஷ்ணா நகரில் உள்ள லிங்கபுதி குளக்கரையில் உருவாக்கப்பட்டுள்ள பூங்காவை தொடங்கி வைத்தார். பின்னர் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் முதல்-மந்திரி சித்தராமையா கலந்து கொண்டார்


Next Story