மத்திய மந்திரி ஷோபாவுக்கு பா.ஜனதா மாநில தலைவர் பதவி?


மத்திய மந்திரி ஷோபாவுக்கு  பா.ஜனதா மாநில தலைவர் பதவி?
x
தினத்தந்தி 19 Oct 2023 6:45 PM GMT (Updated: 19 Oct 2023 6:46 PM GMT)

மத்திய மந்திரி ஷோபாவுக்கு எதிா்க்கட்சி தலைவர் பதவி வழங்க பா.ஜனதா மேலிடம் திட்டமிட்டுள்ளது.

பெங்களூரு-

மத்திய மந்திரி ஷோபாவுக்கு எதிா்க்கட்சி தலைவர் பதவி வழங்க பா.ஜனதா மேலிடம் திட்டமிட்டுள்ளது.

அரசியலில் இருந்து ஓய்வு

கர்நாடக சட்டசபைக்கு கடந்த மே மாதம் தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் கட்சியாக இருந்த பா.ஜனதா தோல்வி அடைந்தது. காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ளது. இதையடுத்து கட்சியின் மாநில தலைவரை மாற்ற பா.ஜனதா முடிவு செய்தது. ஆனால் புதிய ஆட்சி அமைந்து 5 மாதங்கள் ஆகியும் இதுவரை கட்சி தலைவரையோ அல்லது சட்டசபை எதிர்க்கட்சி தலைவரையோ பா.ஜனதா மேலிடம் நியமிக்கவில்லை.

இதனால் கர்நாடக பா.ஜனதா தலைவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மாநில தலைவரையும், எதிர்க்கட்சி தலைவரையும் விரைவாக நியமிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். பா.ஜனதாவில் செல்வாக்கு மிக்க தலைவராக இருப்பவர் எடியூரப்பா. வயது மூப்பு காரணமாக அவர் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார்.

அவருக்கு அடுத்த படியாக உள்ள தலைவர்கள் யாருக்கும் மக்கள் செல்வாக்கு இல்லை. அதனால் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க முடியாமல் பா.ஜனதா மேலிடம் திணறி வருகிறது. எடியூரப்பா சமீபத்தில் டெல்லி சென்று, தனது மகன் விஜயேந்திராவை தலைவராக்குமாறு கேட்டுக் கொண்டார்.

மத்திய மந்திரி ஷோபா

ஆனால் அவர் இளம் தலைவராக இருப்பதால் அவரை தலைவர் பதவியில் அமர்த்த பா.ஜனதா விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. ஒக்கலிகர் சமூகத்தை சேர்ந்த மத்திய மந்திரி ஷோபாவை மாநில தலைவராக்க பா.ஜனதா மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் இந்துத்துவா கொள்கையில் தீவிரமாக இருப்பவர். தனது அனல் பறக்கும் பேச்சால் மக்களை ஈர்க்கும் திறன் கொண்டவராக உள்ளார்.

மாநில காங்கிரஸ் அரசுக்கு எதிராக தீவிரமாக களத்தில் இறங்கி போராடும் தலைவராக அவர் இருக்கிறார். அவரை தலைவராக நியமிப்பதன் மூலம் ஒக்கலிகர் சமூகத்தின் ஆதரவை பெற முடியும் என்று பா.ஜனதா கருதுகிறது. சட்டசபை எதிர்க்கட்சி தலைவரை தேர்ந்தெடுப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.

முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்க பா.ஜனதா மேலிடம் விரும்பவில்லை என்று சொல்லப்படுகிறது. அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் அவரால் தீவிரமாக செயல்பட முடியாது என்று அக்கட்சி கருதுகிறது.

அதனால் இந்துத்துவா கொள்கையில் மிக தீவிரமாக இருக்கும் பசனகவுடா பட்டீல் யத்னால் எம்.எல்.ஏ.வை எதிர்க்கட்சி தலைவராக்க பா.ஜனதா திட்டமிட்டுள்ளது. தசரா பண்டிகை முடிவடைந்ததும், இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story