கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு குறைவு


கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு குறைவு
x

கே.ஆர்.எஸ், கபினி அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது குறைந்தது.

மண்டியா:

கர்நாடகத்தில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்தது. தற்போது மழைப்பொலிவு குறைந்து காணப்படுகிறது. மேலும் கேரளா வயநாடு உள்ளிட்ட நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை குறைந்துவிட்டது. இதனால் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி அருகே உள்ள கிருஷ்ணராஜசாகர்(கே.ஆர்.எஸ்.) அணை, மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளி கிராமம் அருகே உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து குறைந்து உள்ளது. அதன்படி நேற்று மாலை நிலவரப்படி 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையில் 122.05 கன அடிக்கு தண்ணீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 44 ஆயிரத்து 241 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 53 ஆயிரத்து 604 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு இருந்தது.

அதுபோல் கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையில் நேற்று காலை நிலவரப்படி 2,282.91 அடி தண்ணீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 14 ஆயிரத்து 601 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 8 ஆயிரத்து 458 கன அடி தண்ணீர் கபிலா ஆற்றில் திறந்து விடப்பட்டு இருந்தது. இவ்விரு அணைகளில் இருந்தும் திறந்துவிடப்பட்ட தண்ணீர் ஒன்றாக சங்கமித்து அகன்ற காவிரியாக தமிழகம் செல்கிறது. அதன்படி நேற்று இவ்விரு அணைகளில் இருந்தும் மொத்தம் வினாடிக்கு 62 ஆயிரத்து 62 கன அடி தண்ணீர் தமிழகத்துக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.


Next Story