கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு முதல் பள்ளி-கல்லூரிகளில் யோகா பாடத்திட்டம்: முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவிப்பு


கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு முதல் பள்ளி-கல்லூரிகளில் யோகா பாடத்திட்டம்: முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவிப்பு
x

கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு முதல் பள்ளி-கல்லூரிகளில் யோகா பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.

பெங்களூரு:

யோகா பாடத்திட்டம்

பெங்களூரு அருகே தனியார் கல்லூாியில் நடைபெற்ற விழாவில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை யோகா ஆராய்ச்சி மாநாடு நிறைவு விழாவில் கலந்து கொண்டு பேசினார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் அடுத்த கல்வி ஆண்டு (2023-24) முதல் உயர்நிலை பள்ளி மற்றும் கல்லூரிகளில் யோகா பாடத்திட்டம் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக யோகா நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி இறுதி முடிவு எடுக்கப்படும். இன்றைய சூழ்நிலையில் குழந்தைகள் கடும் மன அழுத்தத்தில் இருக்கிறார்கள். கொரோனா பரவல் போன்ற விஷயங்களால் குழந்தைகள் வீடுகளில் இருந்தபடி கல்வி கற்கிறார்கள். இது அவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுகிறது.

மன அழுத்தம்

இத்தகைய மன அழுத்தத்தை போக்குவதற்கு யோகா பயிற்சி பெரும் உதவியாக இருக்கும். குழந்தை பருவத்தை எந்த அழுத்தமும் இன்றி மகிழ்ச்சியாக கழிக்க வேண்டும். வருகிற 21-ந் தேதி யோகா தின விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடி மைசூரு வருகிறார். அவர் கர்நாடகத்திற்கு வருவதே விசேஷம் தான். இதன் மூலம் மைசூரு உலகின் கவனத்தை பெறும்.

அன்றைய தினம் மைசூருவில் பெரிய அளவில் யோகா தின விழா நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதில் பள்ளி-கல்லூரி மாணவர்கள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொள்கிறார்கள். யோகாவை வளர்க்க அரசு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்து ஆரோக்கிய கர்நாடகம் என்ற பெயரில் தகவல்களை வெளியிடுகிறோம்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.


Next Story