வேலை பார்த்த வீட்டில் நகை, பணம் திருடிய வேலைக்காரர் உள்பட 2 பேர் கைது
வேலை பார்த்த வீட்டில் நகை, பணம் திருடிய வேலைக்காரர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சில்வாசா,
தாத்ராநகர் ஹைவேலி சில்வாசாவை சேர்ந்தவர் ஜெய்னம். இவரது வீட்டில் பனஸ்கந்தா பகுதியை சேர்ந்த தனபாய் ராஜ்புத் என்பவர் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று முதலாளி வீட்டில் இருந்த நகை, பணத்தை கூட்டாளி ஹரேஷ்பாய் என்பவருடன் சேர்ந்து கொள்ளை அடித்து விட்டு தப்பி சென்றார். சம்பவம் குறித்து வீட்டு உரிமையாளர் ஜெய்னம் சில்வாசா போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடிவந்தனர். இதற்கிடையில் நேற்று வாபி ரெயில் நிலையம் நோக்கி ஆட்டோ ஒன்று சென்றது. இந்த ஆட்டோவில் சந்தேகப்படும்படி 2 பேர் பெரிய பையுடன் சென்றதை வாகன சோதனை பணியில் ஈடுபட்ட போலீசார் கண்டனர். இதனை தொடர்ந்து ஆட்டோவை வழிமறித்த போது 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். போலீசார் விரட்டி சென்று 2 பேரையும் மடக்கி பிடித்தனர். பையில் நடத்திய சோதனையில் நகைகள் இருந்ததை கண்டு அவற்றை பறிமுதல் செய்தனர். போலீஸ் விசாரணையில், அவர்கள் ஜெய்னம் வீட்டில் புகுந்து திருடிய வேலைக்காரர் தனபாய், ஹரேஷ்பாய் என தெரியவந்தது. இதையடுத்து அவர்களை சில்வாசா போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.