பயங்கரவாதிகளால் 3 ராணுவ அதிகாரிகள் கொலை: காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததால் அங்கு நிலைமை மாறவில்லை - மத்திய அரசு மீது உத்தவ் சிவசேனா தாக்கு


பயங்கரவாதிகளால் 3 ராணுவ அதிகாரிகள் கொலை: காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததால்  அங்கு நிலைமை மாறவில்லை - மத்திய அரசு மீது உத்தவ் சிவசேனா தாக்கு
x
தினத்தந்தி 16 Sept 2023 12:30 AM IST (Updated: 16 Sept 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

ஜம்மு-காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ததால் நிலைமை மாறிவிடவில்லை என மத்திய அரசை உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சி சாடி உள்ளது.

மும்பை,

ஜம்மு-காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ததால் நிலைமை மாறிவிடவில்லை என மத்திய அரசை உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சி சாடி உள்ளது.

3 ராணுவ அதிகாரிகள் கொலை

ஜம்மு-காஷ்மீரில் சமீபத்தில் 3 ராணுவ அதிகாரிகள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான 'சாம்னா'வின் தலையங்கத்தில் கூறி இருப்பதாவது:- ஜம்மு-காஷ்மீரில் தற்போது நிலைமை சரியில்லை. ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஜி-20 மாநாடு வெற்றி களிப்பில் மூழ்கி உள்ளது. ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டு 4 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும். காஷ்மீர் பள்ளத்தாக்கில் சட்டசபை தேர்தல் நடத்தப்படவில்லை. பா.ஜனதா கட்சி தாங்கள் தோற்றுவிடுவோம் என்ற பயத்தில் தேர்தலை நடத்தாமல் இருப்பது மக்களுக்கு செய்யும் துரோகம்.

நிலைமை மாறவில்லை

காஷ்மீர் பண்டித்துகள் தாய் நிலம் திரும்புவார்கள், அங்கு புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்படும், வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்ற பல்வேறு வாக்குறுதிகள் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படும் நேரத்தில் வழங்கப்பட்டது. ஆனால் அதுபோன்று இதுவரை எதுவும் நடக்கவில்லை. பயங்கரவாதிகளின் ஆதிக்கம் தொடர்கிறது. அங்கு நிலைமை மாறவில்லை. சிறப்பு அந்தஸ்தை வழங்கும் 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்து லடாக்கை தனி யூனியன் பிரதேசமாக மாற்றியதன் மூலம் பா.ஜனதா அரசு என்ன சாதித்து விட்டது?. லடாக்கில் உள்ள நமது நிலத்தை இந்த அரசால் திரும்ப பெற முடியாது, காஷ்மீரில் பண்டித்துகளை பாதுகாக்க முடியாது, ராணுவ வீரர்களின் உயிரிழப்புகளை தடுக்க முடியாது, ஊடுருவலையும் தடுக்கவோ, காஷ்மீர் மக்களின் மனதை அமைதிப்படுத்தவோ முடியாது. இது இந்த அரசின் தோல்வியாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story