மும்பை- ஆமதாபாத் புல்லட் ரெயில் திட்டத்துக்காக மலையை குடைந்து சுரங்கப்பாதை- 350 மீட்டர் நீளத்துக்கு அமைப்பு


மும்பை- ஆமதாபாத் புல்லட் ரெயில் திட்டத்துக்காக மலையை குடைந்து சுரங்கப்பாதை- 350 மீட்டர் நீளத்துக்கு அமைப்பு
x
தினத்தந்தி 6 Oct 2023 12:15 AM IST (Updated: 6 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மும்பை- ஆமதாபாத் புல்லட் ரெயில் திட்டத்துக்காக குஜராத் மாநிலம் வல்சாட்டில் மலையை குடைந்து 350 மீட்டர் நீளத்துக்கு சுரங்கப்பாதை வெற்றிகரமாக அமைக்கப்பட்டுள்ளது.

மும்பை,

மும்பை- ஆமதாபாத் புல்லட் ரெயில் திட்டத்துக்காக குஜராத் மாநிலம் வல்சாட்டில் மலையை குடைந்து 350 மீட்டர் நீளத்துக்கு சுரங்கப்பாதை வெற்றிகரமாக அமைக்கப்பட்டுள்ளது.

புல்லட் ரெயில் திட்டம்

மராட்டிய தலைநகர் மும்பை மற்றும் குஜராத் மாநிலம் ஆமதாபாத் இடையே ரூ.1.08 லட்சம் கோடி செலவில் புல்லட் ரெயில் திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இதில் ரூ.10 ஆயிரம் கோடியை மத்திய அரசின் தேசிய அதிவிரைவு ரெயில் கழகமும், மராட்டிய மற்றும் குஜராத் மாநில அரசுகள் தலா ரூ.5 ஆயிரம் கோடியையும் செலவிடுகிறது. மீத தொகை ஜப்பான் நாடு வழங்கும் கடன் மூலம் பெறப்படுகிறது.

மும்பை- ஆமதாபாத் புல்லட் ரெயில் திட்டத்துக்காக 7 மலை சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளன. மேலும் மும்பை பி.கே.சி.யில் இருந்து தானே சில்பாடா வரை 21 கி.மீ. சுரங்கப்பாதை அமைய உள்ளது. இதில் தானே கழிமுகப்பகுதியில் மட்டும் கடலுக்கு அடியில் 7 கி.மீ. நீள சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. நாட்டில் முதல் முறையாக கடலுக்கு அடியில் அமைய உள்ள சுரங்கப்பாதை இதுவாகும்.

மலை சுரங்கப்பாதை

இந்தநிலையில் புல்லட் ரெயில் திட்டத்துக்காக குஜராத் மாநிலம் வல்சாட்டில் மலையை குடைந்து சுரங்கப்பாதை வெற்றிகரமாக அமைக்கப்பட்டுள்ளது. வல்சாட்டில் உள்ள உம்பர்காவ் தாலுகா, சரோலி கிராமம் அருகே இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. நியூ ஆஸ்ட்ரியன் சுரங்க தொழில்நுட்ப (என்.ஏ.டி.எம்.) முறையை பயன்படுத்தி 10 மாதங்களில் சுரங்கப்பாதை உருவாக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தேசிய அதிவிரைவு ரெயில் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சுரங்கப்பாதை 350 மீட்டர் நீளம், 12.6 மீட்டர் விட்டம், 10.25 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கப்பாதையில் 2 தண்டவாளம் அமைய உள்ளது" என்றார்.


Next Story