புத்த பிட்சுவாக இந்தியாவுக்குள் நுழைந்து ஜிம் உடற்பயிற்சியாளராக மாறிய வங்கதேசத்தை சேர்ந்தவர் கைது
புத்த பிட்சுவாக இந்தியாவுக்குள் நுழைந்து, ஜிம் பயிற்சியாளராக மாறி மராட்டியத்தில் வாழ்ந்து வந்த வங்கதேசத்தை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.
நாக்பூர்,
புத்த பிட்சுவாக இந்தியாவுக்குள் நுழைந்து, ஜிம் பயிற்சியாளராக மாறி மராட்டியத்தில் வாழ்ந்து வந்த வங்கதேசத்தை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.
போலி இந்திய பாஸ்போர்ட்
ஐதராபாத் விமான நிலையத்தில் போலி இந்திய பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு செல்ல முயன்ற வங்காள தேசத்தை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் மராட்டிய மாநிலம் நாக்பூர், தெகா பகுதியை சேர்ந்த பாலஷ் பிபன் (40) என்பவர் 2 பேருக்கும் போலி ஆவணங்கள் மூலம் இந்திய பாஸ்போர்ட் வாங்கிகொடுத்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் பலாஷ் பிபனை கண்காணித்து வந்தனர். சுமார் ஒரு மாத கண்காணிப்புக்கு பிறகு போலீசார் அவரை கைது செய்தனர்.
புத்த பிட்சு, ஜிம் உடற்பயிற்சியாளர்
பாலஷ் பிபன் 2010-ம் ஆண்டுக்கு முன் புத்த பிட்சு போல வேடமணிந்து இந்தியாவுக்குள் நுழைந்து உள்ளார். அவர் போலீசாரிடம் சிக்காமல் இருக்க சுமார் 4 ஆண்டுகளாக புத்த பிட்சுவாகவே வாழ்ந்து இருக்கிறார். புத்த மடங்களில் தங்கி காலத்தை கழித்து உள்ளார். அதன்பிறகு அவர் சாதாரண மனிதர்களை போல வாழ விரும்பி, ஜிம் உடற்பயிற்சியாளராக மாறினார். பின்னர் காதலில் விழுந்த அவர், அந்த பெண்ணுடன் தாய்லாந்தும் சென்று வந்து இருக்கிறார். மேலும் அவர் வங்காள தேசத்தில் இருந்து பலரை இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக அழைத்து வந்து, அவர்களுக்கு போலி ஆவணங்கள் மூலம் இந்திய பாஸ்போர்ட் வாங்கி கொடுத்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்து உள்ளது. போலீசார் பலாஷ் பிபன் மீது மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.