வீட்டு வசதி சங்க தேர்தலில் சிவசேனா பிரமுகரை தாக்கி ரகளை செய்த 20 பேர் மீது வழக்கு
வீட்டு வசதி தேர்தலில் சிவசேனா பிரமுகரை தாக்கி ரகளையில் ஈடுபட்ட 20 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தானே, ஆக.30-
வீட்டு வசதி தேர்தலில் சிவசேனா பிரமுகரை தாக்கி ரகளையில் ஈடுபட்ட 20 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ரகளையில் ஈடுபட்ட கும்பல்
அம்பர்நாத் நவ்ரே பார்க் பகுதியில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே குழுவை சேர்ந்த சிவசேனா கட்சியின் பிரமுகராக இருந்து வருபவர் அஜித் நாயர் (வயது39). இவர் கடந்த 27-ந் தேதி வீட்டு வசதி சங்கத்தின் தேர்தலில் கலந்து கொண்டார். அப்போது அங்கு வந்த கும்பல் வீட்டு வசதி சங்கத்தின் உறுப்பினர்களின் இருக்கைகளை இழுத்து சேதப்படுத்தி ரகளையில் ஈடுபட்டனர். இதனை கண்ட அஜித் நாயர் கும்பலை தடுக்க முயன்றார். அந்த கும்பல் அவர் மீது தாக்குதல் நடத்தியது. பின்னர் மோசமான விளைவை சந்திக்க நேரிடும் என மிரட்டி விட்டு அங்கிருந்து சென்றனர்.
20 பேர் மீது வழக்கு
தாக்குதலில் காயமடைந்த அஜித் நாயரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து அவர் போலீசில் புகார் அளித்தார். எனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அஜித் நாயர் தெரிவித்தார். இதன்பேரில் போலீசார் 20 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். தாக்குதலில் ஈடுபட்ட 5 பேர் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். அவர்களை கைது செய்ய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.