போலீசாரிடம் சிக்காமல் தப்பி ஓடியபோது வாலிபர் தவறி விழுந்து பலி; ஆஸ்பத்திரியில் உறவினர்கள் ரகளை


போலீசாரிடம் சிக்காமல் தப்பி ஓடியபோது வாலிபர் தவறி விழுந்து பலி; ஆஸ்பத்திரியில் உறவினர்கள் ரகளை
x
தினத்தந்தி 24 Sept 2023 12:45 AM IST (Updated: 24 Sept 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

போலீசாரிடம் இருந்து தப்பி ஓடிய வாலிபர் தவறி விழுந்து உயிரிழந்தார். ஆத்திரமடைந்த உறவினர்கள் ஆஸ்பத்திரியில் நடத்திய ரகளையால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

வசாய்,

போலீசாரிடம் இருந்து தப்பி ஓடிய வாலிபர் தவறி விழுந்து உயிரிழந்தார். ஆத்திரமடைந்த உறவினர்கள் ஆஸ்பத்திரியில் நடத்திய ரகளையால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

வாலிபர் பலி

பால்கர் மாவட்டம் அகாஷி-கோலாப்பூர் கிராமத்தில் உள்ள மண்டலில் அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்திருந்தனர். அங்கு கிராமத்தை சேர்ந்த வாலிபர்கள் சிலர் இரவு தங்கியதாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலை 2.45 மணி அளவில் அந்த வழியாக போலீசார் ரோந்து வாகனம் வந்துள்ளது. இதைப்பார்த்தும் அங்கிருந்த வாலிபர்கள் பீதியடைந்து ஓட தொடங்கியதாக கூறப்படுகிறது. அப்போது அதில் வினோத் போயர்( வயது 18) என்ற வாலிபர் தடுமாறி விழுந்துவிட்டார். மயங்கிய நிலையில் இருந்த அவரை போலீசார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.

ஆஸ்பத்திரியில் பரபரப்பு

இதனால் கோபமடைந்த பெற்றோர் மற்றும் உள்ளூர் மக்கள் ஆஸ்பத்திரியில் ரகளையில் ஈடுபட்டனர். அவர்கள் போலீசார் தாக்கியதில் தான் வினோத் போயர் இறந்ததாக குற்றம் சாட்டினர். இதனால் மருத்துவமனையில் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து நிலைமை கட்டுக்குள் கொண்டுவர ஆஸ்பத்திரியில் போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

போலீஸ் தாக்குதல்

இந்த சம்பவம் குறித்து உள்ளூர் வாலிபர்கள் சிலர் கூறுகையில், " நாங்கள் மண்டல் அருகே செல்போனில் விளையாடிக்கொண்டு இருந்தோம். அப்போது அங்குவந்த போலீசார் தாக்கியதில் தான் வினோத் போயர் உயிரிழந்தார்" என்றனர். மேலும் விநாயகர் மண்டலை அனுமதிக்க வாலிபர்களிடம் போலீசார் லஞ்சம் கேட்டதாகவும் உறவினர் ஒருவர் போலீசில் தெரிவித்தார். ஆனால் போலீஸ் அதிகாரி இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார். அவர் கூறுகையில், " வாலிபர் மாரடைப்பால் இறந்திருக்க வாய்ப்புள்ளது. இருப்பினும் சரியான காரணம் பிரேத பரிசோதனைக்கு பிறகு தான் தெரியவரும்" என்றார்.


Next Story