தற்கொலை செய்ய ஆன்லைனில் சிறந்த வழியை தேடிய வாலிபர்; இன்டர்போல் போலீசார் உதவியால் மீட்கப்பட்டார்
வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் எண்ணத்தில் ஆன்லைனில் தற்கொலை செய்துகொள்ள சிறந்த வழியை தேடிய வாலிபரை போலீசார் மீட்டுள்ளனர்.
மும்பை,
வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் எண்ணத்தில் ஆன்லைனில் தற்கொலை செய்துகொள்ள சிறந்த வழியை தேடிய வாலிபரை போலீசார் மீட்டுள்ளனர்.
மும்பை வாலிபர்
மும்பையை சேர்ந்த ஒருவர் இணையதளத்தில் "தற்கொலை செய்வதற்கு சிறந்த வழி" எது என பலமுறை தேடி உள்ளார். அவரின் தேடலை சர்வதேச குற்றவியல் போலீஸ் அமைப்பான இன்டர்போல் அதிகாரிகள் கவனித்தனர். அந்த நபர் ஏதோ பிரச்சினையில் இருப்பதை புரிந்துகொண்ட அதிகாரிகள் அவரின் தொலைபேசி எண்ணுடன் மும்பை போலீசாருக்கு நேற்று முன்தினம் மின் அஞ்சல் ஒன்றை அனுப்பினர். இதையடுத்து வாலிபரை மீட்க மும்பை போலீசார் துரித நடவடிக்கையில் இறங்கினர். இன்டர்போல் அதிகாரிகள் கொடுத்த தொலைபேசி எண்ணின் சிக்னல் மூலமாக போலீசார் நடத்திய விசாரணையில், அந்த மொபைல் எண்ணை பயன்படுத்துபவர் 28 வயது வாலிபர் என்பதும், அவர் மால்வானியில் வசித்து வருவதும் தெரியவந்தது.
மீட்பு
இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் வாலிபர் விபரீத முடிவு எதையும் எடுப்பதற்கு முன்பு அவரை தடுத்து நிறுத்தி மீட்டனர். விசாரணையில், அந்த வாலிபர் ராஜஸ்தானை பூர்வீகமாக கொண்டவர் என தெரியவந்தது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வாலிபரின் தாயார் குற்றவியல் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு மும்பை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரை சிறையில் இருந்து மீட்க முடியாததால் வாலிபர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். அதுமட்டும் இன்றி கடந்த 6 மாதங்களாக வேலையில்லாமல் இருந்துள்ளார். இது மேலும் அவருக்கு விரக்தியை ஏற்படுத்தி உள்ளது. எனவே தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் அவரது மனதில் தோன்றியுள்ளது. எனவே தற்கொலைக்கான சிறந்த வழியை அவர் ஆன்லைனில் தேடியது தெரியவந்தது. போலீசார் அவருக்கு ஆலோசனை வழங்கி உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.