மராத்தா சமூகத்தினர் மீது தடியடி விவகாரம்: உத்தவ் கட்சி தலைவர்கள் கவர்னருடன் சந்திப்பு - பட்னாவிஸ் பதவி விலக வலியுறுத்தல்


மராத்தா சமூகத்தினர் மீது தடியடி விவகாரம்: உத்தவ் கட்சி தலைவர்கள் கவர்னருடன் சந்திப்பு - பட்னாவிஸ் பதவி விலக வலியுறுத்தல்
x
தினத்தந்தி 6 Sep 2023 8:00 PM GMT (Updated: 6 Sep 2023 8:01 PM GMT)

மராத்தா சமூகத்தினர் மீது தடியடி நடத்திய விவகாரத்தில் உத்தவ் கட்சி தலைவர்கள் கவர்னரை சந்தித்து துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பதவி விலக வலியுறுத்தினர்.

மும்பை,

மராத்தா சமூகத்தினர் மீது தடியடி நடத்திய விவகாரத்தில் உத்தவ் கட்சி தலைவர்கள் கவர்னரை சந்தித்து துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பதவி விலக வலியுறுத்தினர்.

வன்முறை

மராட்டியத்தில் இடஒதுக்கீடு கேட்டு மராத்தா சமூகத்தினர் பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜல்னா மாவட்டம் அன்டர்வாலி கிராமத்தில் மராத்தா இடஒதுக்கீடு கேட்டு மனோஜ் பாட்டீல் என்பவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். அவரை அப்புறப்படுத்தி ஆஸ்பத்திரியில் சேர்க்க கடந்த வெள்ளிக்கிழமை போலீசார் அன்டர்வாலி கிராமத்துக்கு சென்றனர். அப்போது அங்கு திரண்டு இருந்த மக்கள் மனோஜ் பாட்டீலை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லவிடாமல் போலீசாரை தடுத்தனர். இதையடுத்து அங்கு வன்முறை வெடித்தது. போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசியும், தடியடி நடத்தியும் கூட்டத்தை கலைத்தனர். பல வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. இந்த வன்முறையில் போலீசார் உள்பட 40 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்துக்கு எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தன. உள்துறையை தன்வசம் வைத்திருக்கும் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசும் வருத்தம் தெரிவித்தார்.

கவர்னருடன் சந்திப்பு

இந்த நிலையில் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சியை சேர்ந்த மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் அம்பாதாஸ் தன்வே, முன்னாள் மந்திரி ஆதித்ய தாக்கரே உள்ளிட்ட தலைவர்கள் நேற்று ராஜ்பவன் சென்று கவர்னர் ரமேஷ் பயசை சந்தித்தனர். அப்போது ஜல்னா தடியடி சம்பவத்துக்கு பொறுப்பேற்று துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை ராஜினாமா செய்ய உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினர்.

மன்னிப்பு போதாது

கவர்னரை சந்தித்து விட்டு வெளியே வந்த அம்பாதாஸ் தன்வே நிருபர்களிடம் கூறுகையில், "ஜல்னா தடியடி சம்பவத்துக்கு தேவேந்திர பட்னாவிஸ் மன்னிப்பு கோரி உள்ளார். மன்னிப்பு மட்டும் போதாது. அவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இதை நாங்கள் கவர்னரிடம் வலியுறுத்தி உள்ளோம்" என்றார். முன்னாள் மந்திரி ஆதித்ய தாக்கரே கூறுகையில், "தடியடி சம்பவத்துக்கு உத்தரவிட்டது யார்? என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்" என்றார்.


Next Story