ஆஸ்பத்திரி டீனை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த சிவசேனா எம்.பி. மீது வழக்குப்பதிவு
நாந்தெட் அரசு ஆஸ்பத்திரி டீனை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த சிவசேனா எம்.பி. மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மும்பை,
நாந்தெட் அரசு ஆஸ்பத்திரி டீனை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த சிவசேனா எம்.பி. மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
31 நோயாளிகள் பலி
நாந்தெட் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் 2 நாளில் பச்சிளம் குழந்தைகள் உள்பட 31 நோயாளிகள் பலியான சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மருந்து தட்டுப்பாடு, உரிய சிகிச்சை இன்றி நோயாளிகள் இறந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் அந்த ஆஸ்பத்திரிக்கு சிவசேனாவை (முதல்-மந்திரி ஷிண்டே அணி) சேர்ந்த ஹிங்கோலி தொகுதி எம்.பி. ஹேமந்த் பாட்டீல் சென்றார். அவர் ஆய்வு செய்தபோது ஆஸ்பத்திரி சுகாதாரமற்ற நிலையில் இருந்துள்ளது. மேலும் கழிவறைகள் படுமோசமாக இருந்ததாக கூறப்படுகிறது.
ஆஸ்பத்திரி டீனுக்கு தண்டனை
இதனால் ஆத்திரம் அடைந்த ஹேமந்த் பாட்டீல் எம்.பி., ஆஸ்பத்திரி பொறுப்பு டீனான எஸ்.ஆர். வகோடேவை கண்டித்தார். மேலும் அவரை ஆஸ்பத்திரி கழிவறையை சுத்தம் செய்ய வைத்து தண்டனை கொடுத்தார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. ஆஸ்பத்திரி டீன் ஒருவரை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்துக்கு இந்திய மருத்துவ சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அதன் மராட்டிய பிரிவு தலைவர் டாக்டர் ரவீந்திர குடே நிருபர்களிடம் கூறியதாவது:- நாந்தெட் அரசு ஆஸ்பத்திரியில் நிகழ்ந்த மரணங்கள் குறித்து முறையான விசாரணை நடத்த வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். ஆனால் அரசியல்வாதி ஒருவர் மருத்துவ கல்லூரி பொறுப்பு டீனை நடத்திய விதம் சரியல்ல. இது நியாயமற்றது. சம்பந்தப்பட்ட எம்.பி. மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்க தவறினால் மாநிலம் முழுவதும் டாக்டர்கள் போராட்டம் நடத்துவார்கள். இது தொடர்பாக முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேக்கு கடிதம் அனுப்பி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
வழக்குப்பதிவு
இந்தநிலையில் ஆஸ்பத்திரி டீன் எஸ்.ஆர். வகோடே நாந்தெட் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் ஹேமந்த் பாட்டீல் எம்.பி. மீது அரசு ஊழியரை கடமையை செய்ய விடாமல் தடுத்ததாகவும், அவரை அவதூறாக பேசியதாகவும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.