மும்பையில் மக்களை கவர்ந்த 'சாக்லேட்' விநாயகர்; பாலில் கரைத்து ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவாக வழங்க முடிவு
மும்பையில் வீடு ஒன்றில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சாக்லேட்' விநாயகர் பொது மக்களை கவர்ந்து உள்ளது. இந்த சிலையை பாலில் கரைத்து ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவாக வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
மும்பை,
மும்பையில் வீடு ஒன்றில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சாக்லேட் விநாயகர் பொது மக்களை கவர்ந்து உள்ளது. இந்த சிலையை பாலில் கரைத்து ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவாக வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
'சாக்லெட்' விநாயகர்
மும்பையில் ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் நகர் முழுவதும் விதவிதமான விநாயகர் சிலைகளை பொது இடங்கள், வீடுகளில் நிறுவி வழிபடுகிறார்கள். இந்த ஆண்டும் காகித விநாயகர், பழ விநாயகர், காய்கறி விநாயகர், வந்தே பாரத் ரெயில் விநாயகர் என பல வகை விநாயகரை மக்கள் வடிவமைத்து உள்ளனர். தமிழர்கள் தமிழக கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் விநாயகர் பந்தல்களை வடிவமைத்து உள்ளனர். இதில் சாந்தாகுருசை சேர்ந்த ரின்டு ரதோட் என்ற பெண் 2 அடி உயர சாக்லேட் விநாயகரை உருவாக்கி வழிபாட்டுக்காக நிறுவி உள்ளார். இந்த விநாயகரை சாக்லேட், 9 வகையான சிறு தாணியங்களை கொண்டு வடிவமைத்து உள்ளார். இது 40 கிலோ எடை கொண்ட விநாயகர் ஆகும்.
பாலில் கரைக்கப்படும்
இதுகுறித்து ரின்டு ரதோட் கூறுகையில், "விருச்சிகாசன' தோற்றத்தில் வடிவமைத்துள்ள இந்த விநாயகர் சிலையை நாம் முழுமையாக சாப்பிட முடியும். 'விருச்சிகாசன' தோற்றம் புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. சமீபத்தில் நான் இயற்கை மருத்துவம் படிப்பை முடித்தேன். அதன் மூலம் தான் இந்த யோசனை வந்து வித்தியாசமான விநாயகரை உருவாக்கினேன். சிலை கோகோ பவுடர், 9 வகையான சிறுதானியம், உலர்ந்த அத்திப்பழம், முந்திரி, பாதாம், குங்குமப்பூ, ஏலக்காய், வெல்லம் பயன்படுத்தி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை 20 மணி நேரத்தில் உருவாக்கினேன். சாக்லேட் உருகாமல் இருக்க சிலை ஏ.சி. அறையில் வைக்கப்பட்டுள்ளது. 11-வது நாளில் சாக்லேட் விநாயகரை பாலில் கரைத்து, அதை குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு கொடுக்க உள்ளோம். இதுபோல செய்வதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படாது" என்றார். மும்பையில் பெண் தயாரித்து உள்ள இந்த வித்தியாசமான விநாயகர் மக்களை வெகுவாக கவர்ந்து இருக்கிறது.