சத்தாரா மாவட்டத்தில் இரு சமூகத்தினரிடையே மோதல்; ஒருவர் சாவு - இணையதள சேவை முடக்கம்
சத்தாரா மாவட்டத்தில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் பலியானார். முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு இணையதள சேவை முடக்கப்பட்டது.
புனே,
சத்தாரா மாவட்டத்தில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் பலியானார். முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு இணையதள சேவை முடக்கப்பட்டது.
சர்ச்சைக்குரிய கருத்து
சத்தாரா மாவட்டம் கட்டாவோ தாலுகா பூசேவாலி கிராமத்தில் ஒரு சமூகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் சமூகவலைத்தளத்தில் கருத்து தெரிவித்து இருந்தார். இவரது கருத்து மற்றொரு சமூகத்தை சேர்ந்தவர்களிடையே சர்ச்சையை கிளப்பியது. இதனால் இரு சமூகத்தினர் இடையே நேற்றுமுன்தினம் இரவு மோதல் ஏற்பட்டது. ஒருவருக்கு ஒருவர் தாக்கி கொண்டதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இந்த மோதல் தொடர்பாக ஒருவர் படுகாயமடைந்து உயிரிழந்தார். 8 பேர் காயமடைந்தனர்.
வன்முறையில் ஈடுபட்ட கும்பல்
இந்த சம்பவத்தில் சில கும்பல் அப்பகுதியில் உள்ள வீடுகள், கடைகளை அடித்து சேதப்படுத்தி வன்முறையில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்ற போது அக்கும்பலினர் அங்கிருந்து தப்பி சென்றனர். மோதலில் காயமடைந்தவர்களை மீ்ட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி விசாரணை நடத்தி கும்பலை சேர்ந்த சிலரை கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அங்கு அசம்பாவிதம் ஏற்படா வண்ணம் கூடுதல் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தில் இணையதள சேவையை நிறுத்தி வைத்தனர். வதந்தியை நம்ப வேண்டாம் எனவும், அமைதி காக்க வேண்டும் எனவும் போலீசார் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.