குழந்தையின் உள்ளாடையில் மறைத்து ரூ.1 கோடி தங்கத்தை சென்னைக்கு கடத்த முயன்ற தம்பதி கைது
தங்களது உள்ளாடை மற்றும் குழந்தையின் உள்ளாடையில் மறைத்து ரூ.1 கோடி தங்கம் கடத்திய கணவன்-மனைவி மும்பை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். சென்னை செல்ல முயன்றபோது அவர்கள் சிக்கினர்.
மும்பை,
தங்களது உள்ளாடை மற்றும் குழந்தையின் உள்ளாடையில் மறைத்து ரூ.1 கோடி தங்கம் கடத்திய கணவன்-மனைவி மும்பை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். சென்னை செல்ல முயன்றபோது அவர்கள் சிக்கினர்.
சிங்கப்பூரில் இருந்து வந்தவர்கள்
மும்பை சர்வதேச விமான நிலையத்தில் சம்பவத்தன்று சிங்கப்பூரில் இருந்து வந்த விமானம் ஒன்று தரை இறங்கியது. விமானத்தில் இறங்கிய இந்திய தம்பதி தனது 3 வயது மகனுடன் சென்னை செல்ல உள்ளூர் விமான நிலையம் நோக்கி சென்றனர்.
இவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த விமான நிலைய சுங்க அதிகாரிகள் தம்பதியை மறித்து உடைமைகளில் சோதனை போட்டனர். அவற்றில் எதுவும் சிக்கவில்லை. அவர்களை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை போட்டனர். அப்போது தம்பதியின் உள்ளாடைக்குள் தங்க துகள்கள் இருந்ததை கண்டுபிடித்து அவற்றை மீட்டனர்.
குழந்தையின் உள்ளாடையில்...
மேலும் சந்தேகத்தின் பேரில் அவர்களது 3 வயது மகனின் உள்ளாடையில் (டயப்பர்) சோதனை போட்டனர். அதிலும் தங்க துகள்களை மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அவர்களிடம் இருந்து மொத்தம் 2 கிலோ தங்கத்துகள்கள் சிக்கியது. அவை 24 காரட் கொண்டவை ஆகும். இந்த தங்க துகள்களின் மதிப்பு ரூ.1 கோடியே 5 லட்சம் ஆகும்.
நூதன முறையில் தங்கம் கடத்தி வந்த தம்பதியை சுங்க அதிகாரிகள் சாகர் விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தம்பதியை கைது செய்தனர். மேலும் இவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.