நாளை 'தஹி கண்டி' உற்சாகம்; கோவிந்தாக்கள் மனித பிரமிடு அமைத்து அசத்துகிறார்கள்


நாளை தஹி கண்டி உற்சாகம்; கோவிந்தாக்கள் மனித பிரமிடு அமைத்து அசத்துகிறார்கள்
x
தினத்தந்தி 6 Sept 2023 1:00 AM IST (Updated: 6 Sept 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் நாளை ‘தஹி கண்டி' விழா உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக கோவிந்தாக்கள் மனித பிரமிடு அமைத்து அசத்த உள்ளனர்.

மும்பை,

மும்பையில் நாளை 'தஹி கண்டி' விழா உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக கோவிந்தாக்கள் மனித பிரமிடு அமைத்து அசத்த உள்ளனர்.

தஹி கண்டி திருவிழா உற்சாகம்

நிதி தலைநகரான மும்பையில் கொண்டாட்டங்களுக்கு பஞ்சமில்லை. அனைத்து பண்டிகைகளும் மும்பையில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக கிருஷ்ண ஜெயந்திக்கு மறுநாள் நடைபெறும் 'தஹி கண்டி' எனப்படும் தயிர்பானை உடைப்பு மற்ற பகுதிகளில் இல்லாத அளவுக்கு கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனை உறியடி என்றும் அழைக்கின்றனர். நாளை (வியாழக்கிழமை) மும்பையில் மிகுந்த உற்சாகத்துடன் தஹி கண்டி கொண்டாடப்படுகிறது. இதனால் தற்போதே நகரம் விழாக்கோலம் கண்டுள்ளது. கிருஷ்ணர், மனித பிரமிடு அமைத்து உயரத்தில் தொங்கவிடப்பட்டு இருக்கும் தயிர் பானைகளை உடைத்து, தயிர், வெண்ணெயை திருடி தின்றதாக கூறப்படுகிறது. அதை நினைவு கூறும் வகையில், தஹி கண்டி திருவிழா உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

அரசியல் கட்சியினர் தீவிரம்

மும்பையில் நாளை பல்வேறு இடங்களில் தஹி கண்டி கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக தாதர், ஒர்லி, காட்கோபர், பாந்திரா மற்றும் தானேயில் பெரிய அளவில் உறியடி திருவிழா நடைபெற உள்ளது. இதற்காக கோவிந்தா குழுவினர் மனித பிரமிடு அமைத்து அசத்துகிறார்கள். பல இடங்களில் இந்தி, மராத்தி நடிகர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள உள்ளனர். தேர்தல் சமயம் என்பதால் அரசியல் கட்சியினர் போட்டி போட்டு விழா ஏற்பாடுகளை செய்து உள்ளனர். மேலும் மனித பிரமிடு அமைத்து தயிர் பானையை உடைக்கும் கோவிந்தா குழுக்களுக்கு கோப்பை, ரொக்கம் பரிசாக காத்திருக்கிறது.

தமிழ் அமைப்புகள்

தஹி கண்டி கொண்டாட்டத்தையொட்டி மும்பையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கொண்டாட்டம் நடைபெறும் இடங்களில் போக்குவரத்தில் மாற்றங்கள் இருக்கும். அது தொடர்பாக அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். முன்னதாக இன்று மும்பையில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. குறிப்பாக தமிழ் அமைப்பினர் சார்பில் பல்வேறு இடங்களில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது.


Next Story