மராட்டியத்தில் 8 ஆயிரம் மக்களை மண்ணில் புதைத்த பூகம்பம்; 30-வது ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு
மராட்டியத்தில் 8 ஆயிரம் பேரை மண்ணில் புதைத்த பூகம்பத்தின் 30-வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
மும்பை,
மராட்டியத்தில் 8 ஆயிரம் பேரை மண்ணில் புதைத்த பூகம்பத்தின் 30-வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
பறிபோன 8 ஆயிரம் உயிர்கள்
மராட்டிய மாநிலம் லாத்தூர் மாவட்டத்தில் கடந்த 1993-ம் ஆண்டு செப்டம்பர் 30-ந் தேதி பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. பூமி 2 முறை குலுங்கியதில் ரிக்டர் அளவு கோலில் முறையே 6.2, 6.3 புள்ளிகள் பதிவானது. இந்த பேரிடரில் கிலாரி உள்பட 52 கிராமங்கள் தரைமட்டமாகின. மக்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது அதிகாலை நேரத்தில் நிகழ்ந்த இந்த துயர சம்பவத்தில் 8 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் மண்ணில் புதைந்து உயிரோடு சமாதியானார்கள். 16 ஆயிரம் பேர் காயமடைந்தனர். இயற்கையின் சதியால் நிகழ்ந்த இந்த பெருந்துயரம் நடந்து 30 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் இன்றளவும் வேதனையில் தவித்து வருகின்றனர். இந்தநிலையில் நிலநடுக்கம் ஏற்பட்ட 30-வது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் லாத்தூர், கிலாரி கிராமத்தில் பொது மக்கள் கடைகளை அடைத்து இருந்தனர். இதேபோல கிலாரியில் உள்ள நினைவிடத்தில் பொது மக்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.
சரத்பவார் உருக்கம்
நினைவு தின நிகழ்வில் கலந்து கொண்ட தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறியதாவது:- கிலாரி நிலநடுக்கத்தை அடுத்து உருவான திறமையான நிர்வாக அமைப்பு இருப்பதால், தற்போது இந்தியா எந்த ஒரு பேரழிவையும் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள முடியும். கிலாரி பேரழிவு சம்பவத்தில் இருந்து தான் நாடு பேரிடர் மேலாண்மை பாடத்தை கற்றுக்கொண்டது. மேலும் நமக்கு அதன் மூலம் அனுபவம் கிடைத்தது. எதிர்கால இயற்கை பேரிடர்களை சந்திக்கும் பலம் நம்மிடம் உள்ளது. நாம் பேரிடர் மேலாண்மை சட்டத்தையும் பலப்படுத்தி உள்ளோம். கிலாரி நிலநடுக்கம் போன்ற பேரழிவை நான் இதுவரை பார்த்தது இல்லை. அது மனதை உலுக்கியது. உடல்கள் குவிந்து கிடந்தன. வீடுகள் இடிந்து கிடந்தன. மக்கள் வலியில் துடித்து கொண்டு இருந்தனர். இவ்வாறு அவர் உருக்கமாக பேசினார்.