5 மாடி கட்டிடத்தில் தீ விபத்து; கரும்புகையில் சிக்கிய 33 பேர் மீட்பு
சாக்கிநாக்காவில் உள்ள 5 மாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டு கரும்புகையில் சிக்கிய 33 பேர் தீயனைப்பு படையினர் மீட்டனர்
மும்பை,
மும்பை சாக்கிநாக்காவில் உள்ள 5 மாடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தின் மின்மீட்டர் பெட்டியில் நேற்று காலை 8.50 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் கட்டிடம் முழுவதும் கரும்புகை பரவியது. கட்டிடத்தில் இருந்தவர்களுக்கு புகையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் மொட்டை மாடிக்கு சென்றனர். அங்கு பூட்டு போடப்பட்டு இருந்ததால் அவர்களால் மாடிக்கு செல்ல முடியாமல் போனது. இது பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். கட்டிடத்தில் சிக்கி இருந்த 33 பேரை மீட்டு பத்திரமாக வெளியேற்றினர். இதன்பிறகு அங்கு பற்றிய தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். காலை 10.46 மணி அளவில் அங்கு பற்றிய தீயை முற்றிலும் அணைத்தனர். இந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை என தீயணைப்பு படையினர் தெரிவித்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.