மும்பை விமான நிலையத்தில் விமானம் விபத்தில் சிக்கியது எப்படி? - படுகாயம் அடைந்த 2 விமானிகளுக்கும் தீவிர சிகிச்சை


மும்பை விமான நிலையத்தில் விமானம் விபத்தில் சிக்கியது எப்படி? - படுகாயம் அடைந்த 2 விமானிகளுக்கும் தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 16 Sept 2023 12:30 AM IST (Updated: 16 Sept 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

மும்பை விமான நிலையத்தில் விமானம் விபத்தில் சிக்கியது எப்படி என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. 2 விமானிகளும் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மும்பை,

மும்பை விமான நிலையத்தில் விமானம் விபத்தில் சிக்கியது எப்படி என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. 2 விமானிகளும் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்தில் சிக்கிய விமானம்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில் இருந்து வந்த சிறிய ரக தனியார் விமானம் நேற்று முன்தினம் மாலை மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கியபோது, ஓடுதளத்தில் பயங்கரமாக மோதி விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் முன் பகுதி துண்டாக முறிந்தது. இந்த விபத்தில் 2 விமானிகள் உள்பட 8 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. விமானம் தரையிறங்கியபோது மழை பெய்து கொண்டு இருந்தது. வானிலை தெளிவற்ற நிலையில் இருந்தது. விமானத்தின் வலது இறக்கை ஓடுதளத்தில் பயங்கரமாக மோதியதால் விமானம் சறுக்கி சென்று விழுந்ததாக கூறப்படுகிறது. மேலும் மோதிய வேகத்தில் விமானத்தின் டயர்கள் கழன்று ஓடியதும் தெரியவந்தது. விமானம் விபத்தில் சிக்கியது பற்றி விமான போக்குவரத்து இயக்குனரகம் விசாரணையை தொடங்கி உள்ளது. இதற்காக அதிகாரிகள் மும்பை வந்துள்ளனர்.

ஏற்றுமதி நிறுவன அதிகாரிகள்

விபத்துக்குள்ளான இந்த விமானத்தை மும்பையை சேர்ந்த கப்பல் மற்றும் ஏற்றுமதி நிறுவனம் ஒன்று வாடகைக்கு எடுத்து இருந்தது தெரியவந்துள்ளது. இதில் அந்த நிறுவனத்தை சேர்ந்த நிர்வாக இயக்குனர் துருவ் கோடக் மற்றும் தொழில் சார்ந்த பிரதிநிதிகள் 4 பேர் பயணித்தனர். இதில் ஒருவர் டென்மார்க் நாட்டை சேர்ந்தவர். மேலும் விமானிகளாக சுனில் பாட்(வயது40), நெய்ல் திவான் (21) ஆகியோர் இருந்தனர். விமான பணிப்பெண் காமாட்சி என்பவரும் பயணித்தார். இந்த விபத்தில் 8 பேரும் காயம் அடைந்த நிலையில் 3 பேர் மட்டும் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுவதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் ஆகர்ஸ் சேதி என்பவர் மட்டும் லேசான சிராய்ப்பு காயத்துடன் தப்பி உள்ளார். மற்ற 7 பேரும் பல வகையான காயம் அடைந்து இருப்பதும், அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதும் தெரியவந்தது.

2 விமானிகளும் படுகாயம்

இதில் தனியார் கப்பல் மற்றும் ஏற்றுமதி நிறுவன நிர்வாக இயக்குனர் துர்வ் கோடக்கிற்கு கைகள் மற்றும் தலைப்பகுதியில் காயம் ஏற்பட்டு உள்ளது. விமானிகள் 2 பேரும் படுகாயம் அடைந்து உள்ளனர். அவர்களுக்கு முதுகு தண்டுவடம் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதில் நெய்ல் திவானுக்கு இடுப்புக்கு கீழ் முடங்கி விட்டதாகவும், அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருப்பதாகவும் ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்து உள்ளது. விமானம் விபத்தில் சிக்கியதும் 2 விமானிகளை தவிர மற்றவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு உள்ளனர். ஆனால் விமானிகளை போராடி மீட்டதாக தீயணைப்பு படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Next Story