சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களில் 'இந்தியா' கூட்டணி கட்சிகள் இடையே பிரச்சினை வராமல் பார்த்து கொள்வோம்; சரத்பவார் பேட்டி
சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களில் ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் இடையே பிரச்சினை வராமல் பார்த்து கொள்வோம் என்று சரத்பவார் கூறினார்.
மும்பை,
சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களில் 'இந்தியா' கூட்டணி கட்சிகள் இடையே பிரச்சினை வராமல் பார்த்து கொள்வோம் என்று சரத்பவார் கூறினார்.
கூட்டணி கட்சிகள் இடையே பிரச்சினை
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நேற்று புனேயில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், நாடாளுமன்ற தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் சில தொகுதிகளுக்கு காங்கிரஸ் உரிமை கோருவதால் திரிணாமுல் காங்கிரசுடன் பிரச்சினை ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுவது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு சரத்பவார் பதிலளித்து கூறியதாவது:- மேற்கு வங்கத்தில் உடனடியாக எந்த தேர்தலும் நடைபெறவில்லை. தேர்தல் நெருங்கும் நேரத்தில் கூட்டணி கட்சிகள் இடையே சில வேறுபாடுகள் ஏற்படும் சாத்தியகூறுகளை மறுக்க முடியாது. எனினும், கூட்டணியில் இருந்து நடுநிலையான தலைவர்களை அனுப்பி பிரச்சினைகளை தீர்த்து வைப்போம்.
5 மாநிலங்கள் முக்கியமானவை
அதேவேளையில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலங்கள் முக்கியமானவை. இந்த மாநிலங்களில் 'இந்தியா' கூட்டணி கட்சிகள் இடையே பிரச்சினை வராமல் பார்த்து கொள்வோம். இதில் முன்னெச்சரிக்கையாக இருப்போம். நான் மும்பை திரும்பிய பிறகு இது தொடர்பாக காங்கிரஸ் மற்றும் இதர கூட்டணி கட்சி தலைவர்களுடன் பேசுவேன். மேலும் இதற்கான செயல்முறையை இன்னும் 10 நாட்களில் தொடங்குவோம். இவ்வாறு அவர் கூறினார்.