அமிதாப் பச்சனை சந்தித்த மம்தா பானர்ஜி
மும்பையில் நடிகர் அமிதாப் பச்சனை நேரில் சென்று சந்தித்தார் மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி
மும்பை,
மேற்குவங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி இன்றும்(வியாழக்கிழமை), நாளையும் நடைபெறும் இந்தியா கூட்டணி கூட்டத்தில் கலந்துகொள்ள நேற்று விமானம் மூலம் மும்பை வந்தார். மும்பை விமான நிலையத்தில் இறங்கியவுடன் அவர் ஜூகுவில் உள்ள நடிகர் அமிதாப் பச்சன் இல்லத்திற்கு காரில் சென்றார். அங்கு நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:- கொல்கத்தாவுக்கு வருமாறு நடிகர் அமிதாப் பச்சனுக்கு அழைப்பு விடுத்தேன். நடிகர் அமிதாப் பச்சன் நமக்கு கிடைத்த பாரத ரத்னா ஆவார். அவரது குடும்பமும் திரைத்துறைக்கு பெரும் பங்களிப்பை அளித்துள்ளது. இன்று நான் அமிதாப் பச்சனுக்கு ராக்கி கட்டினேன். இன்று ஒரு பெரிய நாளாகும். இவ்வாறு அவர் கூறினார். மேலும் ரக்ஷா பந்தன் தினத்தை முன்னிட்டு இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். கடந்த ஆண்டு கொல்கத்தாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் அமிதாப் பச்சன் கலந்துகொண்டார். அப்போது முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, "இந்திய சினிமாவுக்கு அமிதாப் பச்சனின் பங்களிப்பை பாராட்டி அவருக்கு நாட்டின் உயரிய பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்" என்று வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.