தானே அருகே, 40 மாடி கட்டிடத்தில் 'லிப்ட்' அறுந்து விழுந்து 6 தொழிலாளிகள் பரிதாப சாவு - ஒருவருக்கு தீவிர சிகிச்சை


தானே அருகே, 40 மாடி கட்டிடத்தில் லிப்ட் அறுந்து விழுந்து 6 தொழிலாளிகள் பரிதாப சாவு - ஒருவருக்கு தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 11 Sept 2023 1:30 AM IST (Updated: 11 Sept 2023 1:31 AM IST)
t-max-icont-min-icon

தானே அருகே 40 மாடி கட்டிடத்தில் ‘லிப்ட்’ அறுந்து விழுந்த கோர விபத்தில் 6 தொழிலாளிகள் பலியாகினர். படுகாயமடைந்த ஒருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தானே,

தானே அருகே 40 மாடி கட்டிடத்தில் 'லிப்ட்' அறுந்து விழுந்த கோர விபத்தில் 6 தொழிலாளிகள் பலியாகினர். படுகாயமடைந்த ஒருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

'லிப்ட்' அறுந்து விழுந்தது

தானே பால்கும் பகுதியில் புதிதாக 40 மாடி கொண்ட கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தில் 'லிப்ட்' அமைக்கும் பணியில் நேற்று தொழிலாளர்கள் சிலர் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். இந்த பணி முடிந்ததும் 7 தொழிலாளர்கள் லிப்டில் ஏறி அதன் இயங்கும் திறனை சோதனை செய்தனர். அப்போது, திடீரென லிப்ட்டின் கம்பி அறுந்ததால் உயரத்தில் சென்றுகொண்டு இருந்த லிப்ட் பயங்கர சத்தத்துடன் கீழே விழுந்து நொறுங்கியது. அப்போது, லிப்டுக்குள் இருந்த தொழிலாளிகள் இடிபாடுகளுக்குள் சிக்கி மரண ஓலம் எழுப்பினர். இதனை கண்ட அங்கிருந்தவர்கள் 'லிப்ட்'டில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

6 தொழிலாளிகள் பலி

இதற்கிடையே தகவல் அறிந்து தானே பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை தீவிரப்படுத்தினர். அப்போது 'லிப்ட்' விபத்தில் சிக்கி 5 தொழிலாளிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. மேலும் 2 தொழிலாளிகள் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். அவர்களை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது. மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீஸ் விசாரணை

இந்த சம்பவம் குறித்து காப்பூர்பாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து, பலியான தொழிலாளிகளை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்த விபத்து பற்றி அப்பகுதி முன்னாள் கவுன்சிலர் சஞ்சய் போயர் கூறுகையில், "கட்டிடத்தில் லிப்ட் அறுந்து விழுந்த சம்பவத்தில் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு முன்னேற்பாடுகள் எதுவும் செய்து தரப்படவில்லை. இதுவே உயிரிழப்புக்கு காரணமாகி உள்ளது. இது குறித்து லிப்ட் அமைத்து தரும் கம்பெனி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.


Next Story