சனாதன தர்மம் குறித்த உதயநிதி ஸ்டாலின் கருத்தை யாரும் ஏற்கவில்லை - உத்தவ் சிவசேனா சொல்கிறது


சனாதன தர்மம் குறித்த உதயநிதி ஸ்டாலின் கருத்தை யாரும் ஏற்கவில்லை - உத்தவ் சிவசேனா சொல்கிறது
x
தினத்தந்தி 9 Sept 2023 12:45 AM IST (Updated: 9 Sept 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

சனாதன தர்மம் குறித்த தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்தை யாரும் ஏற்கவில்லை என உத்தவ் சிவசேனா கட்சியை சேர்ந்த சஞ்சய் ராவத் எம்.பி. கூறினார்.

மும்பை,

சனாதன தர்மம் குறித்த தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்தை யாரும் ஏற்கவில்லை என உத்தவ் சிவசேனா கட்சியை சேர்ந்த சஞ்சய் ராவத் எம்.பி. கூறினார்.

சனாதனம் குறித்த கருத்து

சனாதன தர்மம் குறித்து தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்து நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் அவரது கருத்தை ஏற்க முடியாது என்று கூறியுள்ளன. இந்தநிலையில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் தீவிர இந்துத்வா கொள்கை கொண்ட உத்தவ் பாலாசாகேப் தாக்கரே கட்சி கருத்து எதுவும் கூறாமல் இருந்தது. அந்த கட்சி மவுனம் காப்பது ஏன்? என்று சிவசேனா தலைவரான மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கேள்வி எழுப்பியிருந்தார்.

ஏற்கவில்லை

இந்தநிலையில் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்தை யாரும் ஏற்கவில்லை என்று உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கூறியுள்ளது. இதுபற்றி அந்த கட்சியை சேர்ந்த சஞ்சய் ராவத் எம்.பி. கூறியதாவது:- சனாதன தர்மம் குறித்த சர்ச்சை கருத்துக்களை கூறி ஒட்டுமொத்த நாட்டின் கோபத்தை ஈர்ப்பது சரியல்ல. உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்தை யாரும் ஏற்கவில்லை. அவருக்கு தனிப்பட்ட பார்வை இருக்கலாம். அது திராவிட கலாசாரத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம். அதை அவர்கள் தங்களுக்குள்ளேயே வைத்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு மதத்திலும் நம்பிக்கைகள் மற்றும் மூடநம்பிக்கைகள் உள்ளன. ஆனால் தீண்டாமை போன்ற பிரச்சினைகளில் இந்து மதத்திற்குள் இருந்து கிளர்ச்சி ஏற்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story