சட்டவிரோதமாக கைது செய்யப்பட்ட இசை ஆசிரியருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு - ஐகோர்ட்டு உத்தரவு


சட்டவிரோதமாக கைது செய்யப்பட்ட இசை ஆசிரியருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு - ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 30 Sept 2023 1:15 AM IST (Updated: 30 Sept 2023 1:16 AM IST)
t-max-icont-min-icon

சட்டவிரோதமாக கைது செய்யப்பட்ட இசை ஆசிரியருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மும்பை,

சட்டவிரோதமாக கைது செய்யப்பட்ட இசை ஆசிரியருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத கைது

மும்பை தார்டுதேவ் பகுதியை சேர்ந்தவர் நிதின் சம்பத். இசை ஆசிரியர். அதிக கட்டணம் குறித்து கேட்டபோது பெண் ஒருவரை அவதூறாக பேசியதாக வந்த புகாரில் இவரை போலீசார் மானபங்க வழக்கில் கடந்த ஜூலை மாதம் கைது செய்தனர். இந்தநிலையில் நிதின் சம்பத்தை போலீசார் சட்டவிரோதமாக கைது செய்து காவலில் அடைத்ததாக அவரது மனைவி நீலம் மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அவர் மனுவில் கூறியிருந்ததாவது:- போலீசார் ஜாமீனில் வெளியே வர முடிந்த வழக்கில் சட்டவிரோதமாக எனது கணவரை கைது செய்தனர். வக்கீல் ஜாமீன் பெற தயாராக இருந்த போதும் போலீசார் அதை அனுமதிக்கவில்லை. மேலும் போலீசார் எனது கணவரின் ஆடைகளை கழற்ற வைத்து, சாத் ரஸ்தா பகுதியில் உள்ள போலீஸ் லாக்-அப்பில் இரவு முழுவதும் அடைத்து வைத்து சித்ரவதை செய்தனர். சட்டவிரோத கைது நடவடிக்கையால் எனது கணவரும், எங்கள் குடும்பத்தினரும் மிகுந்த வேதனை அடைந்தோம். மனரீதியாக பாதிக்கப்பட்டோம். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

ரூ.2 லட்சம் இழப்பீடு

இந்த மனுவை நீதிபதிகள் ரேவதி மோகிதே, கவுரி கோட்டே அடங்கிய அமர்வு விசாரித்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்ட இசை ஆசிரியர் நிதின் சம்பத்துக்கு அரசு 6 வாரங்களில் ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் சம்பவம் குறித்து துணை கமிஷனர் விசாரணை நடத்தி, தவறுக்கு காரணமான போலீசாரை கண்டறிந்து அவர்களிடம் இருந்து இழப்பீடு பணத்தை வசூலிக்க வேண்டும் எனவும் மும்பை போலீஸ் கமிஷனருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story