வியாபாரியை ஏமாற்றி ரூ.26 லட்சம் பறிப்பு: போலி சி.பி.ஐ. அதிகாரி சிக்கினார்
வியாபாரியை ஏமாற்றி ரூ.26 லட்சம் பறித்த போலி சி.பி.ஐ. அதிகாரி சிக்கினார்.
வசாய்,
வியாபாரியை ஏமாற்றி ரூ.26 லட்சம் பறித்த போலி சி.பி.ஐ. அதிகாரி சிக்கினார்.
சி.பி.ஐ போலீஸ்
பால்கர் மாவட்டம் நைகாவ் பகுதியை சேர்ந்த பழைய பொருட்கள் வியாபாரி தினேஷ் சிங். இவருக்கு வியாபார ரீதியாக சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பாக சிக்கல் ஏற்பட்டு இருந்தது. இந்த நிலையில் சோகைல் அப்துல் கான் (வயது43) என்பவரின் அறிமுகம் கிடைத்தது. இவர் தன்னை சி.பி.ஐ போலீஸ் அதிகாரி என தெரிவித்து கொண்டார். இதனை நம்பிய தினேஷ் சிங் தனக்கு ஏற்பட்ட சிக்கல்களை தீர்க்க உதவி செய்யுமாறு தெரிவித்தார். இதற்கு சோகைல் அப்துல் கான் தனக்கு தெரிந்த அதிகாரிகள் இருப்பதாகவும், இதற்காக ரூ.26 லட்சம் தருமாறும் கேட்டார். இதை நம்பிய அவர் ஆன்லைன் பரிமாற்றம் மூலம் ரூ.26 லட்சத்தை அவருக்கு அனுப்பி வைத்தார்.
போலீசில் சிக்கினார்
இருப்பினும் அவருக்கு ஏற்பட்ட சிக்கல் தீரவில்லை. இது தொடர்பாக சரக்கு மற்றும் சேவை வரித்துறை அலுவலகத்திற்கு சென்று விசாரித்தார். இதில் பணம் எதுவும் செலுத்தப்படாமல் சோகைல் அப்துல் கான் தன்னை ஏமாற்றியது தெரியவந்தது. இதுபற்றி போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடிவந்தனர். நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் மிராரோட்டிற்கு வந்த அவரை போலீசார் பிடித்து கைது செய்தனர்.