குறைந்த விலையில் தங்கம் தருவதாக கூறி தொழில் அதிபரிடம் ரூ.௨ கோடி மோசடி - 2 பேருக்கு வலைவீச்சு
குறைந்த விலையில் தங்கம் தருவதாக கூறி தொழில் அதிபரிடம் ரூ.2 கோடி மோசடி செய்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மும்பை,
குறைந்த விலையில் தங்கம் தருவதாக கூறி தொழில் அதிபரிடம் ரூ.2 கோடி மோசடி செய்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
குறைந்த விலையில் தங்கம்
மும்பையை சேர்ந்த 60 வயது தொழில் அதிபர் ஒருவருக்கு பேபி படங்கர் மற்றும் அவரது உதவியாளர் பரசுராம் முண்டே ஆகியோரின் அறிமுகம் கிடைத்தது. இதில் பேபி படங்கர் புனேயில் வர்த்தக நிறுவனம் வைத்திருப்பதாக கூறிக்கொண்டார். மேலும் சுங்கத்துறையினரால் கைப்பற்றிய தங்கத்தை ஏலத்தில் எடுத்து இருப்பதாகவும், இதனை குறைந்த விலையில் விற்க இருப்பதாகவும் கூறினார். இதனால் தங்கத்தை வாங்க விரும்பிய தொழிலதிபர் ஒர்லியில் உள்ள தனது வீட்டிற்கு பேபி படங்கரை அழைத்து சென்றார். அங்கிருந்த 7 கிலோ தங்கத்தை தொழில் அதிபரிடம் காண்பித்தார்.
வழக்குப்பதிவு
பின்னர் மற்றொரு நாள் பேரம் பேசியதில் அந்த தங்கத்தை வாங்க தொழில் அதிபர் ரூ.2 கோடி கொடுத்தார். மறுநாள் தங்கம் தருவதாக கூறிவிட்டு 2 பேரும் தலைமறைவாகி விட்டனர். இதனால் ஏமாற்றம் அடைந்த தொழில் அதிபர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின்படி போலீசார் நடத்திய விசாரணையில் பேபி படங்கர் போதைப்பொருள் விற்று வந்தவர் என தெரியவந்தது. இதனை தொடர்ந்து 2 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.