அரசு ஆஸ்பத்திரியில் தொடர் மரணம்; ஊழல் ஆட்சியால் மக்கள் உயிரை இழக்கின்றனர் - உத்தவ் தாக்கரே கடும் கண்டனம்
மராட்டியத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் தொடர் மரணம் குறித்து பேசிய உத்தவ் தாக்கரே ஊழல் ஆட்சியால் மக்கள் உயிரை இழப்பதாக குற்றம் சாட்டி உள்ளார்.
மும்பை,
மராட்டியத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் தொடர் மரணம் குறித்து பேசிய உத்தவ் தாக்கரே ஊழல் ஆட்சியால் மக்கள் உயிரை இழப்பதாக குற்றம் சாட்டி உள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பு
நாந்தெட்டில் உள்ள டாக்டர் சங்கர்ராவ் சவான் அரசு ஆஸ்பத்திரியில் சமீபத்தில் 48 மணி நேரத்தில் 31 பேர் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோல சத்ரபதி சம்பாஜி அரசு மருத்துவமனையிலும் 18 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு மருந்துகள் பற்றாக்குறை மற்றும் மருத்துவ ஊழியர்கள் பற்றாக்குறை காரணம் என கூறப்படுகிறது. இதுகுறித்து ஆளும் கட்சியை எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடி வருகின்றன. இதுகுறித்து உத்தப் பாலாசாகேப் தாக்கரே கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
ஊழல் நிர்வாகம்
அரசு ஆஸ்பத்திரியில் குறுகிய காலத்தில் நடக்கும் மரணங்களுக்கு ஊழல் நிறைந்த நிர்வாகமே காரணம். இந்த அரசிடம் விளம்பரங்களுக்கு செலவழிக்க பணம் உள்ளது. ஆனால் மக்களின் உயிரை காப்பாற்ற போதுமான நிதி இல்லை. எந்த ஒரு டெண்டர் செயல்முறையும் இன்றி இந்த அரசு மருந்துகளை கொள்முதல் செய்கிறது. இவ்வாறு டெண்டர் இன்றி நீங்கள் செயல்படுவீர்களே ஆனால் அது ஊழலுக்கான கதவை திறந்து விடுகிறீர்கள் என்று அர்த்தம். ஊழல் நிறைந்த ஆட்சியால் மக்கள் உயிரை இழக்கிறார்கள். இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். மருந்துகள் சரிவர சென்று சேரவில்லையா அல்லது, இடைத்தரகர்கள் யாராவது இதில் சம்பந்தப்பட்டு இருக்கிறார்களா என்பது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்.
கொலைக்கு சமமான குற்றச்சாட்டு
கொரோனா தொற்று பரவலின் போது நான் முதல்-மந்திரியாக இருந்த சமயத்தில் சுகாதார உள்கட்டமைப்பு தொற்று சூழ்நிலையை திறமையாக கையாண்டது. சமீபத்தில் மருத்துவமனையில் பெண் மற்றும் அவரது மகன் இறந்த வழக்கில் தவறு செய்த மருத்துவர்கள் மீது கொலைக்கு சமமான குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. ஆனால் நாக்பூர் மற்றும் சத்ரபதி சிவாஜிநகர் ஆகிய ஆஸ்பத்திரி டீன்கள் மீது இதுபோன்ற நடவடிக்கை ஏன் எடுக்கப்படவில்லை. இந்த உயிரிழப்புகள் குறித்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு அரசு தங்கள் பொறுப்பில் இருந்து தப்பித்துக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளது. கோர்ட்டு இந்த சம்பவத்தில் அரசுக்கு பாடம் கற்பித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நமது கட்சி தொண்டர்கள் அரசு மருத்துவமனை டீன்களிடம் பேசி அங்கு மருந்து கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.