சிவாஜிபார்க்கில் தசரா பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரிய விண்ணப்பத்தை சிவசேனா திரும்ப பெற்றது; உத்தவ் அணியுடன் மோதலை தவிர்க்க முடிவு


சிவாஜிபார்க்கில் தசரா பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரிய விண்ணப்பத்தை சிவசேனா திரும்ப பெற்றது; உத்தவ் அணியுடன் மோதலை தவிர்க்க முடிவு
x
தினத்தந்தி 10 Oct 2023 7:15 PM GMT (Updated: 10 Oct 2023 7:16 PM GMT)

தசரா பொதுக்கூட்டத்தை சிவாஜி பார்க்கில் நடத்த அனுமதி கோரிய விண்ணப்பத்தை சிவசேனா திரும்ப பெற்றது. உத்தவ் அணியுடன் மோதல் ஏற்படுவதை தவிர்க்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

மும்பை,

தசரா பொதுக்கூட்டத்தை சிவாஜி பார்க்கில் நடத்த அனுமதி கோரிய விண்ணப்பத்தை சிவசேனா திரும்ப பெற்றது. உத்தவ் அணியுடன் மோதல் ஏற்படுவதை தவிர்க்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

சிவாஜி பார்க்கில் நடத்த போட்டி

சிவசேனாவை பால்தாக்கரே தொடங்கியது முதல் தாதர் சிவாஜி பார்க் மைதானத்தில் ஆண்டுதோறும் அந்த கட்சியின் தசரா பொதுக்கூட்டம் நடந்து வருகிறது. இதில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிவசேனா 2 ஆக உடைந்தது. அந்த கட்சி உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே தலைமையில் இரு அணிகளாக செயல்பட்டு வந்தது. இந்தநிலையில் கடந்த பிப்ரவரி மாதம் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணிதான் சிவசேனா என தேர்தல் ஆணையம் அறிவித்தது. உத்தவ் தாக்கரே, உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா என்ற பெயரில் கட்சியை நடத்தி வருகிறார். இந்தநிலையில் வருகிற 24-ந் தேதி சிவாஜி பார்க்கில் தசரா பொதுக்கூட்டம் நடத்த சிவசேனா, உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா என 2 கட்சிகளும் மாநகராட்சியிடம் அனுமதி கேட்டன. இதனால் மாநகராட்சி யாருக்கு அனுமதி கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. கடந்த ஆண்டு சிவசேனா 2 அணிகளாக செயல்பட்ட போது, உத்தவ் தாக்கரேக்கு சிவாஜி பார்க்கில் பொதுக்கூட்டம் நடத்தும் வாய்ப்பு மும்பை ஐகோர்ட்டால் வழங்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு சிவசேனா கட்சி ஏக்நாத் ஷிண்டே வசம் ெசன்றதால் அவர்களுக்கு தான் சிவாஜி பார்க்கில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

விண்ணப்பத்தை திரும்ப பெற்ற சிவசேனா

இந்தநிலையில் சிவாஜி பார்க்கில் தசரா பொதுக்கூட்டம் நடத்த கோரப்பட்ட அனுமதியை ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா நேற்று பிற்பகல் திரும்ப பெற்றது. இந்த தகவலை மாநகராட்சி அதிகாரிகள் உறுதி செய்தனர். இதுகுறித்து சிவசேனாவை சேர்ந்த எம்.எல்.ஏ. சதாசர்வன்கர் எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- இந்த ஆண்டும் சிவசேனா சார்பில் தசரா திருவிழா உற்சாகமாக கொண்டாடப்படும். இந்து பண்டிகையின் போது ஒருவருக்கு ஒருவர் பிரச்சினை ஏற்படுவதை தடுக்க முதல்-மந்திரியும், சிவசேனா தலைவருமான ஏக்நாத் ஷிண்டே தசரா பொதுக்கூட்டத்தை வேறு இடத்தில் நடத்தி கொள்ளலாம் என முடிவு எடுத்து உள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் சிவாஜி பார்க்கில் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனாவுக்கு தசரா பொதுக்கூட்டம் நடத்த மாநகராட்சியின் அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story