மரத்வாடா மண்டல வளர்ச்சிக்காக ரூ.45 ஆயிரம் கோடி சிறப்பு நிதி - மந்திரி சபை கூட்டத்தில் முடிவு
மரத்வாடா மண்டல வளர்ச்சிக்காக ரூ.45 ஆயிரம் கோடி சிறப்பு நிதி வழங்க மந்திரி சபையில் முடிவு எடுத்ததாக முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அறிவித்தார்.
சம்பாஜிநகர்,
மரத்வாடா மண்டல வளர்ச்சிக்காக ரூ.45 ஆயிரம் கோடி சிறப்பு நிதி வழங்க மந்திரி சபையில் முடிவு எடுத்ததாக முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அறிவித்தார்.
மந்திரிசபை கூட்டம்
மரத்வாடா மண்டலம் ஐதராபாத் நிஜாம் ஆட்சியில் இருந்து விடுபட்ட செப்டம்பர் 17-ந் தேதி, ஆண்டு தோறும் "மரத்வாடா முக்தி சங்க்ரம் தின்" என்ற பெயரில் மரத்வாடா விடுதலை நாளாக கொண்டாடப்படுகிறது. மரத்வாடா விடுதலை தினத்தின் 75-ம் ஆண்டையொட்டி மாநில அரசு மரத்வாடா மண்டலத்தில் உள்ள அவுரங்காபாத் நகரில் நேற்று மந்திரி சபை சிறப்பு கூட்டத்தை நடத்தியது. கடைசியாக கடந்த 2016-ம் ஆண்டு மரத்வாடாவில் மந்திரிசபை கூட்டம் நடத்தப்பட்டது. 7 ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் நேற்று அங்கு மந்திரி சபை சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நீர்ப்பாசன வசதி
மரத்வாடா மண்டலத்தின் வளர்ச்சிக்காக ரூ.45 ஆயிரம் கோடிக்கான சிறப்பு நிதி தொகுப்பு வழங்கப்படும். இது தவிர அப்பகுதியின் நீர்ப்பாசன திட்டங்களுக்கு ரூ.14 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது. இந்த திட்டம் மூலம் 8 லட்சம் ஹெக்டேர் நிலம் நீர்ப்பாசன வசதிகளை பெறும். இவ்வாறு அவர் கூறினார். மேலும் மந்திரிசபை கூட்டத்திற்காக நானும், மந்திரிகளும் நகரில் உள்ள 5 நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர்கள் சிலர் முன்வைத்த குற்றச்சாட்டுகளை நிராகரித்த முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, "நாங்கள் அனைவரும் அரசு விருந்தினர் மாளிகையில் தான் தங்கியுள்ளோம்" என்று தெரிவித்தார். முதல்-மந்திரி ஷிண்டேயுடன் செய்தியாளர்கள் சந்திப்பில் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், அஜித்பவார் ஆகியோரும் கலந்துகொண்டனர்.