மும்ரா விரைவு சாலையில் டேங்கர் லாரி கால்வாயில் விழுந்து விபத்து; ரசாயனம் கொட்டியதால் பரபரப்பு
மும்ரா விரைவு சாலையில் கால்வாயில் ரசாயன டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. அதில் இருந்த ரசாயனம் கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தானே,
மும்ரா விரைவு சாலையில் கால்வாயில் ரசாயன டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. அதில் இருந்த ரசாயனம் கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
டேங்கர் லாரி கவிழ்ந்தது
தானே அருகே மும்ரா நெடுஞ்சாலையில் நேற்று காலை 5 மணி அளவில் கந்தக அமிலத்தை ஏற்றி கொண்டு டேங்கர் லாரி ஒன்று சென்றது. திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்ததால் பாலத்தில் இருந்து சறுக்கி கால்வாயில் விழுந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரியில் இருந்த ரசாயனம் கசிவு ஏற்பட்டு கால்வாயில் கொட்டியது. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் கடுமையான துர்நாற்றம் வீசியது. அந்த வழியாக சென்றவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனால் பதற்றமான சூழல் நிலவியது. தகவல் அறிந்த தீயணைப்பு படையினர், பேரிடர் மீட்பு படையினர் விரைந்து வந்தனர்.
8 டன் ரசாயனம்
விபத்தில் சிக்கி காயம் அடைந்த டிரைவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மீட்பு படையினர் சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு ரசாயன கசிவை சரி செய்து லாரியை அங்கிருந்து அகற்றினர். டேங்கர் லாரியில் 8 டன் ரசாயனம் இருந்ததாகவும், விபத்து நடந்த பகுதியில் குடியிருப்பு இல்லாததால் பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டதாகவும் மீட்பு படையினர் தெரிவித்தனர். இந்த விபத்தினால் மும்ரா விரைவு சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.